பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா
x
கால்கள் தன்னை முடக்கிப் போட்டாலும், கனவுகளை முடக்கிட உடல் ஊனம் ஒரு தடையே இல்லை என்று சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே சரித்திரம் படைத்திருக்கிறார் பவீனா படேல். பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று அசத்தியிருக்கிறார் இந்தியாவின் தங்க மங்கை பவீனா... ஞாயிறு காலை இதை விட இனிமையாக விடிவதெப்படி? ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில், வெள்ளி வென்றதன் மூலம், இந்தியாவின் பதக்க வேட்டையைத் துவக்கி வைத்திருக்கிறார் பவீனா.

பாரா ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த முதல் பெண் என்ற பெருமையையும் தன் மகுடத்தில் சூட்டிக் கொண்டுள்ளார். 34 வயதான பவீனா, நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஹா ஜாங் மியாவோவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்குள் வெற்றிகரமாக நுழைந்தார். இன்று நடந்த இறுதிப் போட்டியில், சீனாவின் நம்பர் ஒன் வீராங்கனை, யின் ஜோவிடம் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தாலும், பவீனா படேல் தாய் நாட்டிற்கு வெள்ளிப் பதக்கத்தைப் பரிசளித்துள்ளார். குஜராத் மாநிலம் மெஹ்சனாவில் குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமல்லாது, ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து, பவீனாவின் இறுதிச் சுற்று ஆட்டத்தை பெரிய திரையில் கண்டு மகிழ்ந்தனர்.

திருவிழாக் கோலம் பூண்ட மெஹ்சனாவில், பவீனா வெள்ளிப் பதக்கம் வென்றதும், வண்ண வண்ணப் பொடிகளைத் தூவி, பாரம்பரிய கர்பா நடனமாடி அவர்கள் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். நாடு முழுவதும் பவீனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், புது வரலாறு படைத்துள்ளதாக பவீனாவிற்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, அவர் வென்றது வரலாற்று சிறப்புமிக்க வெள்ளிப்பதக்கம் என்றும் நெகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் நின்று விடாது, பவீனாவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

"இவ்வுலகில் முடியாதது என்பது எதுவுமில்லை"... நேற்று அரையிறுதி வெற்றியின் போது பவீனா உதிர்த்த வார்த்தைகள் இவை... சொன்ன சொற்படி, பாரா ஒலிம்பிக்கில் சரித்திரம் படைத்து, வரலாற்றை மாற்றும் திறனாளியாக மாறியுள்ளார் பவீனா. விளையாட்டில் சாதிக்க ஆயிரம் கனவுகளோடு காத்துக் கொண்டிருக்கும் தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைப் பயணத்தில், பவீனாவின் வெற்றி புது ஒளியாய் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

Next Story

மேலும் செய்திகள்