டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : 7-ம் நாளின் முக்கிய நிகழ்வுகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 7-ம் நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தற்போது காண்போம்...
டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா : 7-ம் நாளின் முக்கிய நிகழ்வுகள்
x
ஒலிம்பிக் திருவிழா ஆரம்பித்து ஒருவாரம் எட்டியுள்ள நிலையில், பல்வேறு போட்டிகள் காலிறுதி சுற்றை நெருங்கி உள்ளன. ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் பி.வி.சிந்து காலிறுதிக்குள் நுழைந்து உள்ளார். நாக்-அவுட் சுற்றில் டென்மார்க் வீராங்கனையை, பி.வி. சிந்து நேர் செட்களில் வீழ்த்தினார். வில்வித்தையில் முன்னணி வீரர் அடானு தாஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவின் ஓ ஜின் ஹயெக்கை, அவர் எலிமினேசன் சுற்றில் வென்று அசத்தினார். இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. லீக் ஆட்டத்தில் பலம் மிக்க அர்ஜென்டினாவை 3-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

அடுத்ததாக குத்துச்சண்டையில் ஆடவர் 91 கிலோவிற்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ்குமார் நாக்-அவுட் சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆனால், மகளிர் 51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை நாக் அவுட் சுற்றில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை, மேரி கோம் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார். டென்னிஸ் அரையிறுதிப் போட்டிக்கு நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் காலிறுதியில், ஜப்பான் வீரரை ஜோகோவிச் துவம்சம் செய்தார். அதேசமயம், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியுற்றார். காலிறுதியில் ஸ்பெயின் வீரர் பாப்லோ பஸ்டாவிடம் சரணடைந்த மெத்வதேவ், ஒலிம்பிக்கில் இருந்தும் வெளியேறினார். டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில், சீனாவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை சென் மெங் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் சக நாட்டு வீராங்கனையை 4-க்கு 2 என்ற செட் கணக்கில் அவர் தோற்கடித்தார். 

டேபிள் டென்னிஸ் ஆடவர் பிரிவில், சீனாவின் நட்சத்திர வீரர்கள் மா லாங் மற்றும் ஃபேன் ஷென்டோங் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டியில் ஆடும் இருவருமே சீனாவை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த முறையும் டேபிள் டென்னிஸில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் சீனாவுக்கு செல்ல உள்ளன. பெண்களுக்கான 200 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் சீன மகளிர் அணி, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. பந்தய தூரத்தை சுமார் 7 நிமிடங்கள் 40 விநாடிகளில் கடந்து சீன மகளிர் அணி, புதிய உலக சாதனையும் படைத்து உள்ளது.

இதேபோல், ஆண்கள் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் டிரெஸ்லல்லும், 200 மீட்டர் ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் ஐசக் குக்கும், 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் அமெரிக்காவின் ராபர்ட் ஃபிங்கேவும் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். இதுமட்டுமின்றி, மகளிர் ஜிம்னாஸ்டிக் தனிப் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சுனிஸா லீ வெற்றி பெற்றார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக, மகளிர் ஜிம்னாஸ்டிக் தனிப் பிரிவில், அமெரிக்காவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்