விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச் 'சாம்பியன்' : 6-வது முறையாக 'சாம்பியன்' பட்டம்

6-வது முறையாக விம்பிள்டன் 'சாம்பியன்' பட்டம் வென்று பெடரர், நடாலின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்... விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் பரபரப்பு நிமிடங்களை தற்போது பார்க்கலாம்...
விம்பிள்டன் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன் : 6-வது முறையாக சாம்பியன் பட்டம்
x
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 9-ம் நிலை வீரரான இத்தாலியின் மாட்டியோ பெரேட்டினியும் பலப்பரீட்சை நடத்தினார். கிராண்ட்ஸ்லாமில் போட்டிகளில் முதல்முறையாக இறுதிசுற்றை எட்டிய பெரெட்டினி முதல் செட்டில் ஜோகோவிச்சுக்கு ஆட்டம் காட்டினார். அனுபவம் வாய்ந்த வீரருக்கு எதிராக, முதல் செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் பெரெட்டினி தனதாக்கியதும் ஆட்டம் விறுவிறுப்பு பெற்றது. இதனையடுத்து ஆவேசமான ஷாட்களால் அதிரடி காட்டிய ஜோகோவிச், பெரேட்டினியை திணறடித்தார். 16 ஏஸ் சர்வீஸ்களை வீசிய பெரேட்டினி, பந்தை வலுவாக வெளியே அடிக்கும் தவறுகளை 48 முறை செய்ததால் சறுக்கலை சந்திக்க நேரிட்டது. பெரேட்டினியின் தவறுகளை தனக்கு சாதகமாக்கி அடுத்தடுத்த செட்களை கைப்பற்றிய ஜோகோவிச் தன் அனுபவத்தை நிரூபித்துக் காட்டினார். 3 மணி 24 நிமிடங்கள் தொடர்ந்த விறுவிறுப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தளித்தது. இறுதியில் ஜோகோவிச் 6-க்கு7, 6-க்கு 4, 6-க்கு 4, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றியை தனதாக்கி விம்பிள்டன் பட்டத்தை உச்சிமுகர்ந்தார்.

இது ஜோகோவிச்சின் 6-வது விம்பிள்டன் பட்டமாகும். ஏற்கனவே 2011, 2014, 2015, 2018, 2019-ம் ஆண்டுகளிலும் விம்பிள்டன் பட்டம் வென்றிருந்தார். பட்டம் வென்ற ஜோகோவிச்சுக்கு 17 கோடியே 50 லட்சம் ரூபாயும், 2-வது இடம் பிடித்த பெரேட்டினிக்கு 9 கோடியே 25 லட்சம் ரூபாயும் பரிசுதொகையாக வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் 34 வயதான ஜோகோவிச்சின் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. இதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிகமாக 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை நடந்துள்ள 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் ஓபனில் ஜோகோவிச்சே வெற்றி வாகை சூடியிருக்கிறார். இதற்கு முன்னதாக 1969 ஆண்டு அமெரிக்காவின் ரோட் லவர் ஒரே ஆண்டில் 3 பட்டங்களை வென்றிருந்தார். தன்னுடைய சிறு வயதில் மிகப்பெரிய கனவாக இருந்தது, இப்போது நிறைவேறியிருக்கிறது எனக் கூறியிருக்கும் ஜோகோவிச்சுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்