பிரிஸ்பேன் டெஸ்ட்டில் கலக்கும் சுந்தர் - அனுபவவீரரைப் போல் அட்டகாச பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்.
பிரிஸ்பேன் டெஸ்ட்டில் கலக்கும் சுந்தர் - அனுபவவீரரைப் போல் அட்டகாச பேட்டிங்
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர். அவரைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு..சற்றே பரந்து விரிந்து காணப்படும் பிரிஸ்பேன் மைதானம்... தொடரை நிர்மாணிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசிக் கொண்டிருந்தனர். இந்திய வீரர்களின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சாய்ந்தன. முதல் இன்னிங்சில், 161 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, இந்தியா தள்ளாடிக் கொண்டிருந்த தருணம் அது...7-ஆவது வீரராக களம் கண்டார், தமிழகத்தை சேர்ந்த அறிமுக வீரர் வாஷிங்டன் சுந்தர்... களமிறங்கிய சில நிமிடங்களிலே ஆஸியின் அதிவேகப்புயல் கம்மின்ஸ், ஷார்ட் பிட்ச் பந்துமூலம், சுந்தரின் இடது தோள்பட்டையை தாக்கினார். தொடர்ந்து, கம்மின்ஸ் வீசிய அதிவேகப் பந்து சுந்தரின் இடுப்பை பதம் பார்த்தது.ஆனால், இவற்றுக்கெல்லாம் சற்றும் சளைக்காமல் ஆட்டத்தை தொடர்ந்தார் வெறும் 21 வயதே ஆன வாஷிங்டன் சுந்தர்...அறிமுக போட்டி என்றாலும், அன்றைய தினம் சுந்தரின் பேட்டிங்கில் முதிர்ச்சி மிளிர்ந்தது. அனுபவம்மிக்க வீரரைப்போல், அவர் ஆடியவிதம் பலரையும் வெகுவாக கவர்ந்தது...இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள்.... அதை நிரூபிக்கும் வகையிலேயே பிரமாதமாக பேட்டிங் செய்தார் சுந்தர்... ஆஸியின் அதிவேகங்களுக்கு அஞ்சாமல், சலசலப்புகளை சட்டை செய்யாமல், ஆடிய அவர், அரைசதம் கடந்தும் அசத்தினார்...இவருடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாக்கூரும் தன் பங்குக்கு மட்டையை சுழற்ற, ஆஸ்திரேலிய பவுலர்கள், இருவரது விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் திணறித்தான் போயினர்...அதுவும் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் ஓவரில்,   கூலாக சிக்சரைப் பறக்கவிட்டார் சுந்தர்....நேர்த்தியுடன் நிலைத்து நின்று ஆடிய சுந்தர், 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், இந்தியா சார்பில் அறிமுக டெஸ்ட் போட்டியில், அரைசதம் அடித்த 3-ஆவது வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி உள்ளார்.முன்னதாக பந்துவீச்சிலும் அசத்திய அவர், ஸ்மித், கிரீன் உள்ளிட்ட முன்னனி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய ஆல்ரவுண்டராக அவதரித்து உள்ளார்.சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட வாஷிங்டன் சுந்தர், டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்டவர். இவரின் தந்தை எம். சுந்தர், கிரிக்கெட் பயிற்சியாளராக உள்ள நிலையில், தந்தையிடம் இளம் வயது முதலே கிரிக்கெட் பற்றிய பல நுணுக்கங்களை கற்று வந்துள்ளார்.12 வயதில் முதல் தர கிரிக்கெட்... 16 வயதில் ரஞ்சி மற்றும் அண்டர் - 19 உலகக்கோப்பை போட்டி... 17 வயதில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டி, 21 வயதில் டெஸ்ட் போட்டி... என்று இளம் வயதிலேயே தனது அசாத்திய திறமைமூலம் புதிய உயரங்களை அடைந்து உள்ளார் வாஷிங்டன் சுந்தர்...சர்வதேச கிரிக்கெட் அரங்கில், வளர்பிறைபோல் வளர்ந்து வரும் வாஷிங்டன் சுந்தர், வானம் தொட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் மேலோங்கிய எண்ணம்...


Next Story

மேலும் செய்திகள்