இந்திய வீரர்கள் மீது இனவெறித் தாக்குதல்

சிட்னி டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது ஆஸ்திரேலிய ரசிகர்கள், இனவெறித் தாக்குதல் நடத்தியதற்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்திய வீரர்கள் மீது இனவெறித் தாக்குதல்
x
பொதுவாக கிரிக்கெட்டை ஜென்டில்மேன் Game என்று சொல்வார்கள். பெரும்பாலும், பெருந்தன்மை தவறாது விளையாடப்படுவதால் அதற்கு அந்த அடையாளம். 

ஆனால், எல்லா காலங்களிலும் ஜென்டில்மேன் Game - ஆக, கிரிக்கெட் இருந்தது கிடையாது. சமீப காலமாக, களத்திலும் சரி... களத்துக்கு வெளியிலும் சரி.. கிரிக்கெட்டின் மேன்மை, தொடர்ந்து கேள்விக்குள்ளாகிக் கொண்டே இருக்கிறது. சில வீரர்களும், ரசிகர்களுமே கிரிக்கெட்டின் மேன்மைக்கு ஆபத்தாகி, அதை சிதைத்துவிடுகின்றனர். 

இதை, பட்டவர்த்தனமாக நிரூபிக்கும் நிகழ்வாகத்தான், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது, சிட்னியில் நிகழ்த்தப்பட்ட, இனவெறித் தாக்குதலை சொல்ல வேண்டும்.

அடிப்படையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இனவெறிப் பிரச்சினை பெருகிக் காணப்படும் நாடு ஆஸ்திரேலியா.... வளர்பிறைபோல் வளர்ந்து வரும் நாடாக அது இருந்தாலும், அங்குள்ள மக்கள் பலரின் மனோபாவம் தேய்பிறையாகத்தான் குறுகி நிற்கிறது. 

சிட்னி டெஸ்ட் போட்டியில், இந்திய பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் மீது இன வெறியை உமிழ்ந்துள்ளனர், மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர்... 

2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டத்தின்போது, எல்லைக் கோட்டுக்கு அருகே பீல்டிங் செய்த, இவர்கள் இருவரும், ஆஸி. ரசிகர்களின் இன வெறிப் பசிக்கு இரையாகி உள்ளனர். 

இது தொடர்பாக, இந்திய அணி நிர்வாகம், கள நடுவர்களிடமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், 4-ஆவது நாள் ஆட்டத்திலும், ஆஸ்திரேலிய ரசிகர்களின் அட்டூழியம் அரங்கேறியது.

மதுபோதையில் மூழ்கி, அடங்க மறுத்த ஆஸி. ரசிகர்கள் சிலர், மைதானத்தில் கூச்சல் குழப்பங்களை விளைவித்தனர். நடுவர்களின் தலையீட்டால் மைதானத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த சம்பவத்துக்கு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்... 

ரசிகர்களின் இனவெறித் தாக்குதல் கண்டனத்துக்கு உரியது என்றும், இனவெறியை தூண்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது. 

இனவெறித் தாக்குதல் போன்ற, இழிவூட்டும் சம்பவங்களால், ஜென்டில்மேன் கேமான கிரிக்கெட்டின் மாண்பு மாசடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்... கிரிக்கெட் ஆர்வலர்கள்...

Next Story

மேலும் செய்திகள்