வரலாற்று தோல்வி - மாற்ற முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7 வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தனது ஆதிக்க நடையை தொடர்கிறது. நேற்றைய போட்டியில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்க்கலாம்....
வரலாற்று தோல்வி - மாற்ற முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்
x
இந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, அமெரிக்கா, துபாய் உள்பட பல்வேறு நாடுகளும் எதிர்நோக்கி காத்திருந்த போட்டி நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. 

இந்தியாவின் ஆதிக்கத்தை இந்த முறையாவது அடக்க முடியுமா என்ற ஏக்கத்துடன் போட்டியை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆறுதலாக அமைந்த‌து டாஸ். டாசில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தீர்மானித்த‌து. உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டதால், இந்தியாவை குறைந்த ரன்களில் சுருட்டிவிட்டு எளிதாக சேஸ் செய்துவிடலாம் என கனவு கண்டார் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது. 

ஆனால், அந்த பந்துவீச்சாளர்களை எளிதாக பந்தாடக்கூடிய தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் தங்கள் வசம் உள்ளனர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளது இந்தியா. தொடக்க ஆட்டக்கார‌ர் தவான் இல்லாத‌து இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், அவரின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார் லோகேஷ் ராகுல். 32 ரன்கள் மற்றும் 37 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மாவை ரன் அவுட் செய்ய சான்ஸ் கிடைத்த‌து. 

பல கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்த‌து போலவே சுமாரான பீல்டிங்கால் அந்த வாய்ப்புகளை தவற விட்டது பாகிஸ்தான். அந்த தவறு எவ்வளவு பெரியது என்பதை தன் சதத்தின் மூலம் காட்டினார் ரோகித் மறுமுனையில் பொறுப்பாக விளையாடி வந்த ராகுல் 57 ரன்கள் இருந்த போது வஹாப் ரியாஸ் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த‌தாக கேப்டன் கோலியுடன் கைகோர்த்து அதிரடியை தொடர்ந்தார் ரோகித். 

34 பந்துகளில் அரைசதம், 85 பந்துகளில் சதம் என அதிரடி காட்டிய ரோகித் 140 ரன்களில் ஹசான் அலி ஓவரில் வெளியேறினார். அடுத்த‌தாக களமிறங்கிய பாண்டியா வழக்கமான பாணியில் அதிரடி காட்ட முயன்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக தனது புதிய favorite ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டில் லாங் ஆன் பீல்டரிடம் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் தோனி ஒரு ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். 

46 வது ஓவரில் எதிர்பார்த்த‌து போலவே குறுக்கிட்டது மழை. ஆனாலும் மைதானத்தை விட்டு வெளியேறாத ரசிகர்கள் முன்னேற்பாடாக கொண்டு வந்த குடையை விரித்த படி வானம் வெறிக்க காத்திருந்தனர். அவர்களது குடைகளிலும் நாட்டு பற்றை காண முடிந்த‌து. ரசிகர்களின் வேண்டுதலின் வருணபகவான் சற்று ஓய்வெடுக்க தொடர்ந்து விளையாடிய கேப்டன் கோலி 77 ரன்களில் அமீர் பந்துவீச்சில் அவுட் ஆனார். 

இறுதியாக ஜாதவ், விஜய் சங்கர் கூட்டணி ஓரளவு ரன் சேர்க்க இந்திய அணி 50 ஓவர்களில் 336 ரன்கள் குவித்த‌து. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் ஆரம்பத்திலே தடுமாறியது. பும்ரா, புவனே​ஷ் ஆகியோரின் பந்துவீச்சை ஓரளவு சமாளித்த பாகிஸ்தான் கேப்டன் கோலி கொடுத்த புதிய டுவிஸ்டில் விக்கெட்டை பறிகொடுத்த‌து. 

4 புள்ளி 4 ஓவர்கள் என்ற நிலையில், பந்துவீசிக்கொண்டிருந்த புவனேஸ்வர் குமாருக்கு திடீரென காயம் ஏற்பட அடுத்த 2 பந்துகளை வீச வந்தார் பாண்டியா. திடீரென சற்றே வித்தியாசமாக சிந்தித்த கோலி, தமிழக வீர‌ர் விஜய் சங்கரிடம் பந்தை கொடுத்தார். கோலி எதிர்பார்த்த‌து போலவே முதல் பந்திலே இமாம் உல் ஹக் விக்கெட்டை சாய்த்தார் விஜய் சங்கர். 

அடுத்த‌தாக வந்த பாபர் அசாம் பக்கார் சமானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி போராடி கொண்டிருந்த நிலையில் குல்தீப் யாதவ் தனது மேஜிக் டெலிவரி மூலம் பாபர் மற்றும் பக்காரை அடுத்த‌டுத்து வெளியேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 
அனுபவ வீர‌ர்களான ஹபீஸ் 9 ரன்களிலும் சோயாப் மாலிக் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்த‌டுத்து  பாண்டியா பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டனர். 

இது இந்திய அணிக்கு திருப்பு முனையாகவும் பாகிஸ்தான் அணிக்கு எதிர்பாராத அடியாகவும் அமைந்த‌து... பாகிஸ்தானின் அடுத்த இருந்த ஒரே நம்பிக்கை கேப்டன் சர்பராஸ் அகமது. அவரும் தமிழக வீர‌ர் விஜய் சங்கர் பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. 

இந்த முறை காத்திருந்த குடைகளில் பெரும்பாலானவை மூவர்ண கொடியாகவே இருந்த‌ன. முடிவை அறிந்த பாகிஸ்தான் அணி ரசிகர்கள் பலர் மழையை சாக்காக பயன்படுத்தி ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினர். மழைக்கு பிறகு டக்வொர்த் லூயிஸ் முறையில் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் அணி 30 பந்துகளில் 136 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. 

இதனால் பாகிஸ்தானின் தோல்வி உறுதியானது. இறுதியாக 40 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்த‌து பாகிஸ்தான். இதனால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது.

 7 வது முறையாக பாகிஸ்தானை பந்தாடி வழக்கம் போல தனது வீர நடையை தொடர்கிறது இந்தியா. இந்தியாவின் ஆதிக்கத்தை இந்த முறையாவது அடக்க முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு வழக்கம் போல ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்