ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து?... தங்கமங்கைக்கு வந்த சோதனை

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊக்கமருந்து பயன்படுத்தினாரா கோமதி மாரிமுத்து?... தங்கமங்கைக்கு வந்த சோதனை
x
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து, 2 நிமிடம் 2 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

ஏழ்மை நிலையிலும் சாதனை படைத்த கோமதி, தனக்கு அரசு தரப்பில் இருந்து பெரிதாக உதவி செய்யவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். கிழிந்த ஷூ அணிந்து கொண்டு ஓடியதாக அவர் பேசியது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது பற்றி, கோமதி மாரிமுத்துவிடம் இந்திய தடகள ஆணையம் விளக்கம் கேட்டதாகவும் தகவல் வெளியானது. 

இந்தநிலையில், ஆசிய தடகள போட்டியின் போது கோமதியிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் 'நான்ட்ரோலோன்' என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து கோமதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாட்டியாலாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேசிய பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் கோமதியிடம், தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நடத்திய ஊக்க மருந்து சோதனையிலேயே அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்த தகவல் யாருக்கும் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. ஊக்க மருந்து சோதனை முடிவை தாமதமின்றி தெரிவித்து இருந்தால் இந்தியா இந்த தர்மசங்கடத்தை சந்திக்க வேண்டிய நிலை வந்து இருக்காது, ஆசிய போட்டியில் கலந்து கொள்ள கோமதியை அனுமதித்து இருக்க மாட்டோம் என்று இந்திய தடகள சம்மேளனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்தின் ஸ்பாலா நகரில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவிருந்தார், கோமதி. ஆனால் ஊக்கமருத்து சோதனையில் சிக்கியதால், அவரது பயணத்தை இந்திய தடகள சம்மேளனம் ரத்து செய்துவிட்டது.

இதனிடையே, கோமதி ஊக்கமருந்து ஏதும் உட்கொள்ளவில்லை என அவரது சகோதரர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கோமதி மீதான பொறாமை காரணமாக வதந்தி பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கோமதியின் 'பி' மாதிரி சோதனையிலும் ஊக்க மருந்து உபயோகப்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவர் வென்ற தங்கப்பதக்கம் பறிபோவதுடன், 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும் என தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்