தமது பேச்சால், ஆயிரக்கணக்கான ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைத்த வீரர்

சமூக வலை தளத்தில், கை கூப்பி அழைப்பு - விராத் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆதரவு...
தமது பேச்சால், ஆயிரக்கணக்கான ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைத்த வீரர்
x

சர்வதேச அளவில், அதிக கோல் அடித்த, தற்போதைய கால்பந்து வீரர்கள் பட்டியலில், இந்திய வீரர் இடம் பிடித்துள்ளார். 59 கோல் எடுத்திருந்த ஸ்பெயினின் டேவிட் வில்லாவை(David Villa), பின்னுக்கு தள்ளிய, இந்திய அணியின் வீரரும், அணித் தலைவருமான சுனில் சேத்ரி, (Sunil Chhetri) 61 கோல்கள் அடித்து, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.  

கென்யா அணிக்கு எதிரான, இண்டர்காண்டினெண்டல்(Intercontinental) கோப்பை தொடரின், லீக் போட்டியில், இரண்டு கோல் அடித்த செஞ்சுரி நாயகன் சுனில் சேத்ரி, ஸ்பெயினின் டேவிட் வில்லாவின், சர்வதேச சாதனையை முறியடித்தார். 

இந்த பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) - 81 கோல்கள் அடித்து முதலிடத்திலும், அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி (Lionel Messi) 64 கோல்கள் அடித்து, இரண்டாம் இடத்திலும் உள்ளனர்....

ஐக்கிய அரபு எமிரேட்சில், அடுத்தாண்டு நடக்கவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய கால்பந்து கூட்டமைப்பு, முதல் முறையாக நான்கு அணிகள் பங்கேற்கும் இண்டர்காண்டினெண்டல் (Intercontinental) கோப்பை தொடரை முதல் முறையாக, இந்தியாவில் நடத்த திட்டமிட்டு அறிவித்தது. இதில் தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில், இந்தியா நேரடியாக தகுதி பெற்றது. பிபா உறுப்பினர்களான சீன தைபே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.  

இந்த நிலையில் மும்பையில் நடந்த லீக் போட்டியில், இந்திய அணி, கென்யா அணியை எதிர்கொண்டது. இது இந்திய அணி தலைவர் சுனில் சேத்ரியின் 100வது சர்வதேச போட்டியாகும். இதற்காக போட்டி  தொடங்கும் முன், இந்திய தலைவர் சுனில் சேத்ரிக்கு, இந்திய கால்பந்து வீரர்கள் மரியாதை அளித்தனர்.

இந்த போட்டியில், சுனில் சேத்ரி, இரண்டு கோல் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 3க்கு-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தமது 100ஆவது சர்வதேச போட்டியில், வெற்றியை கண்டுள்ளார் சுனில் சேத்ரி. முன்னதாக, அவர், வீடியோ ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகொள் ஒன்றை வைத்திருந்தார்.

"கால்பந்து விளையாட்டு அரங்கிற்கு வாருங்கள்; நீங்கள் மைதானத்தில் கத்தலாம், எங்களை திட்டலாம், விமர்சிக்கலாம்; யாருக்குத் தெரியும் ஒருநாள் இவை எல்லாவற்றையும் நாங்கள் மாற்றக்கூடும். நீங்கள் எங்களுக்காக மாறக்கூடும்'' என, அந்த காணொளியில் பேசியிருந்தார் சுனில் சேத்ரி. 

''கால்பந்து ரசிகர் அல்லாதவர்களிடம் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நீங்கள் மைதானத்துக்கு வர வேண்டும். அதற்கு இரு காரணங்கள் உள்ளன. கால்பந்துதான் உலகில் சிறந்த விளையாட்டு என்பது ஒரு காரணம்; மற்றொன்று நாங்கள் நாட்டிற்காக விளையாடுகிறோம்'' என்றும் சுனில் சேத்ரி பேசியிருந்தார். இறுதியில் ரசிகர்களை கைகூப்பியும் அவர் வேண்டிக் கொண்டார். 

அனைத்து விளையாட்டுக்களையும் ஆதரியுங்கள் - விராத் கோலி வேண்டுகோள்

சுனில் சேத்ரி வெளியிட்டுள்ள காணொளியை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, சமூக வலை தளத்தில், ஒரு காணொளியை வெளியிட்டார். ''விளையாட்டுக்கு மதிப்பளிக்கும் பெருமை மிக்க தேசமாக, இந்தியாவை கருத விரும்பினால் அனைத்து விளையாட்டுகளையும் ஏற்றுக்கொண்டு மதிப்பளிக்க வேண்டும்'' என, அவர் பதிவிட்டிருந்தார். 

இந்திய கால்பந்து அணிக்கு பின் நிற்போம், விளையாட்டுக்கு ஆதரவளிப்போம் - சச்சின் அழைப்பு

நம் விளையாட்டு வீரர்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்க கடுமையாக பயிற்சி செய்கிறார்கள். ஒரு விளையாட்டு வீரனுக்கு மிகப்பெரிய கனவு நாட்டுக்காக விளையாடுவதே. இந்திய கால்பந்து அணிக்கு பின் நிற்போம்; ஆதரவளிப்போம்'' என, கிரிக்கெட் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர் தமது, காணொளியில் குறிப்பிட்டிருந்தார். 

சமீபத்தில், இந்திய கால்பந்து அணி விளையாடிய ஒரு போட்டியில், 2 ஆயிரத்து 569 ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர். இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கை கூப்பி ஒரு காணொளியை வெளியிட்டார் 33 வயதான கால்பந்து வீரர் சுனில் சேத்ரி.

இது, அவரது 100வது போட்டி... 2 கோல் அடித்து வெற்றிக்கும் வித்திட்டார்... 

இவை எல்லாவற்றையும் விட, சுனில் விடுத்த கோரிக்கையை அடுத்து, அரங்கம் நிறைந்து காணப்பட்டது. இது தான், இந்த வீரனின் வெற்றியாகும்... 

Next Story

மேலும் செய்திகள்