கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
x
2019ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி கர்நாடகாவின் முதலமைச்சராக 4வது முறையாக எடியூராப்பா பதவி ஏற்றார். 75வயதான எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றபோது வயது மூப்பை காரணம் காட்டி 2 ஆண்டுகள் கடந்ததும் தனது பதவியை விட்டுக் கொடுக்க வேண்டுமென பாஜக சார்பில் நிபந்தனை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற எடியூரப்பா, தான் பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான்,  ஜி.கிஷன் ரெட்டி, பாஜக மாநில தலைவர் நலின்குமார் கதீல், எடியூரப்பா மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.  நீண்ட ஆலோசனைக்கு பிறகு உள்துறை அமைச்சராக இருந்த  பசவராஜ் பொம்மை முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  நாளை பசவராஜ் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாகவும், அதன்பின்னர் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எடியூரப்பா கவனித்து வந்த நிதித்துறையை கூடுதலாக, பசவராஜ் பொம்மை கவனிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது முதலமைச்சராக தேர்வாகியுள்ள பசவராஜ் பொம்மையின் தந்தை  எஸ்.ஆர் பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்