"வகுப்புவாத கட்சியுடன் கூட்டணி ஏன்?" - ஆனந்த் சர்மா சரமாரி கேள்வி

மேற்கு வங்க கூட்டணியில் காங்கிரஸ் தலைவர்களிடையே மோதலை உருவாக்கி இருக்கும் விவகாரம் என்ன..? இதற்கு காரணமான அப்பாஸ் சித்திக் யார்...? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
வகுப்புவாத கட்சியுடன் கூட்டணி ஏன்? - ஆனந்த் சர்மா சரமாரி கேள்வி
x
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக போட்டிக்கு மத்தியில் மூன்றாவது அணியாக  இடதுசாரிகள், காங்கிரசுடன் கூட்டணியாக களமிறங்கியுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள இந்திய மதசார்பற்ற முன்னணி என்ற ஐ.எஸ்.எப். கட்சி சமீபத்தில் இஸ்லாமிய மதகுரு அப்பாஸ் சித்திக்கால் தொடங்கப்பட்டது. இக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து இருப்பதை கடுமையாக எதிர்த்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, ஐ.எஸ்.எப். போன்ற வகுப்புவாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது காங்கிரசின் மைய சித்தாந்தத்திற்கு எதிரானது என்றும் காங்கிரசின் ஆன்மாவாக விளங்கும் காந்தி மற்றும் நேருவின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்றும் டுவிட்டடரில் விமர்சித்துள்ளார். மேலும் வகுப்புவாதத்தை எதிர்த்து போரிடுவதில் காங்கிரஸ் ஒருதலைபட்சமாக செயல்பட முடியாது என்றும், மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவரின் முடிவு வேதனையானது மற்றும் வெட்கக்கேடானது என்றும் டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,  இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்துள்ளது என்றும்  பாஜகவின் வகுப்புவாத மற்றும் பிரித்தாளும் அரசியலை தோற்கடிக்க தாங்கள் உறுதிபூண்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜகவுக்கு ஏற்ப இத்தகைய கருத்துக்களை தெரிவித்து காங்கிரஸ் கட்சியை தாழ்த்துவதற்கு பதிலாக, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என ஆனந்த் சர்மாவுக்கு சூடாக பதிலடி கொடுத்துள்ளார் சவுத்ரி. காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள அப்பாஸ் சித்திக், ஹூக்ளி மாவட்டம் ஃபுர்புரா ஷரீப் கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய மதகுரு. இவர், தெற்கு வங்கத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவராக கருதப்படுகிறார். பீகார் மாநில தேர்தலில் பலத்தை காட்டிய ஓவைசியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்ட அப்பாஸ் சித்திக், இந்திய மதசார்பற்ற முன்னணியை தொடங்கி இடதுசாரிகளுடன் கை கோர்த்துள்ளார். இந்துக்கள் இஸ்லாமியர்களை பிளவுப்படுத்தி இஸ்லாமியர்களுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியவர் மம்தா பானர்ஜியே என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 

34 வயதாகும் இவர், அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பவராக விமர்சனங்கள் நிலவுகிறது. கொல்கத்தாவில் சமீபத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய அப்பாஸ் சித்திக், இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வெற்றிபெற செய்து தாய் நாட்டை விடுவிப்போம் எனவும் தேவைப்பட்டால் அதற்கு ரத்தம் சிந்தவும் தயாராக இருப்போம் எனவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் பிரிவினையை ஆதரிக்கும் வகையிலான சித்திக்கின் இந்தப் பேச்சை, 1946-ல் முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தான் தனிநாடு கோரிய முழக்கத்துடன் ஒப்பிட்டு பாஜக விமர்சனம் செய்தது. இதனிடையே, சித்திக் தலைமையிலான கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் ஆனந்த் சர்மா, காங்கிரசின் தலைமையை மாற்றக்கோரிய 23 அதிருப்தி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம், தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதற்கு காலமே பதிலளிக்கும்.

Next Story

மேலும் செய்திகள்