சட்டப்பேரவை தேர்தல் பற்றி பேசும் இந்த சமயத்தில், அதற்கு இணையாக இருந்த சட்ட மேலவை பற்றியும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.
சட்டப்பேரவை தேர்தல் பற்றி பேசும் இந்த சமயத்தில், அதற்கு இணையாக இருந்த சட்ட மேலவை பற்றியும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது சட்ட மேலவை இல்லாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால், தமிழகத்தில் 1909ம் ஆண்டிலேயே சட்ட மேலவை இருந்தது என்பது தெரியுமா..?
சென்னை மாகாணத்தை...., அதாவது தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டப் பேரவையை விட மிக மூத்த அவை இது.
முதலில் பிரிட்டிஷ் கவர்னர்களுக்கு ஆலோசனை கூறும் சபையாகத்தான் சட்ட மேலவை உருவானது.
ஆரம்ப காலகட்டத்தில் அதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், ஜமீன்தார்களும் மிகப்பெரிய நிலச் சுவான்தாரர்களும் மட்டும் தான்.
1919ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் அமலானதும் 127 உறுப்பினர்களை கொண்ட பெரிய அவையாக சட்ட மேலவை மாறியது.
1920ம் ஆண்டில் சென்னை மாகாண சட்ட மேலவைக்கென தேர்தலும் நடத்தப்பட்டது. மொத்த உறுப்பினர்கள் 127 பேரில் 98 பேர் வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆங்கிலேய ஆட்சியில் பட்டதாரிகளுக்கும் சொத்து வைத்திருப்பவர்களுக்கும் மட்டும் தான் வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், சென்னை மாகாண சட்ட மேலவைக்கு 1920ல் நடந்த முதல் தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்தது. அந்த கட்சி போட்டியிடவில்லை.
இதனால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த பெரிய கட்சியான நீதிக் கட்சி 63 இடங்களை வென்றது. அந்த கட்சிதான் திராவிட இயக்கங்களின் தாய்க் கழகம்.
சட்டப் பேரவை கிடையாது என்பதால் சட்ட மேலவை உறுப்பினர்கள் அடிப்படையிலேயே சென்னை மாகாண முதல்வரும் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி, 1926ம் ஆண்டு வரை ஆறாண்டு காலம் சென்னை மாகாண முதல்வராக இருந்தவர் நீதிக் கட்சியின் மூத்த தலைவர் பனகல் ராஜா.
அவர்தான் சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வர். சட்ட மேலவை மூலமாக முதல்வர் ஆனவர்.
அன்றைய சட்ட விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்ட மேலவை தேர்தல் நடைபெற்றது. அதில் இரண்டு முறை வெற்றி பெற்று முதல்வராக இருந்தார், பனகல் ராஜா
பனகல் ராஜாவுக்கு பின் சுப்பராயன், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா என அடுத்தடுத்து சென்னை மாகாண முதல்வர்களாக பதவி வகித்தனர்.
பிரிட்டிஷாரின் 1935ம் ஆண்டைய இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து சென்னை மாகாணத்தில் சட்டப் பேரவை அமையும் வரை இப்படித்தான் சட்ட மேலவை தேர்தல் மூலமாகவே முதல்வர்கள் தேர்வாகினர்.
சட்டப்பேரவை அமைந்ததும் அதற்கு அதிகாரம் மாற்றப்பட்டு மேலவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையும் 57ஆக குறைக்கப்பட்டது.
சென்னை மாகாணமாக இருந்த காலம் தொட்டு தமிழகம் வரையிலும், சட்டப்பேரவை கூடவே பயணித்து வந்த சட்ட மேலவையின் ஆயுள் 1986ம் ஆண்டுடன் முடிந்து போனது.
அப்போது மேலவை தலைவராக இருந்தவர் மூத்த தலைவர் ம.பொ.சி....
ராஜாஜி, அண்ணா, எம்ஜிஆர் என முதல்வர்கள் அமர்ந்த மேலவையில் கருணாநிதியும் நுழைய காத்திருந்த சமயத்தில் அதற்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது.
இந்தியாவில் இப்போது உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என ஆறு மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை இருக்கிறது.
தமிழகத்தில் 2006ம் ஆண்டு அமைந்த திமுக ஆட்சியின் போது மீண்டும் மேலவையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. ஆனால், அதன்பிறகு, அதிமுக ஆட்சி அமைந்ததும் 2012ல் அந்த முயற்சியும் முடிவுக்கு வந்தது.
தமிழக சட்டப்பேரவை சுவாரஸ்யங்களின் ஆச்சரியம் இன்னும் தொடரும். அடுத்தடுத்த நாட்களில் அவற்றையும் பார்க்கலாம்.