கொடி சர்ச்சை தீப் சித்து - யார்?

டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக்கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.பி.க்கு பிரசாரம் செய்த நடிகர் தீப் சித்துவே காரணம் எனக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
கொடி சர்ச்சை தீப் சித்து - யார்?
x
டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக்கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.பி.க்கு பிரசாரம் செய்த நடிகர் தீப் சித்துவே காரணம் எனக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது. செங்கோட்டையில் நிஷான் சாகிப் கொடியையே ஏற்றினோம், இந்திய தேசியக் கொடி அகற்றப்படவில்லை என்று தீப் சித்து கூறியுள்ளார்.

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் போலீசாரின் தடுப்புகளை உடைத்து டிராக்டர் பேரணி சென்றதால் வன்முறை ஏற்பட்டது. விவசாயிகளின் ஒருதரப்பினர் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து, வரலாற்று சிறப்புமிக்க  கட்டிடத்தில் சீக்கிய மதக்கொடியை ஏற்றினர்.இந்த சம்பவத்திற்கு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும், விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற அனைத்து வன்முறை சம்பவத்திற்கும் காரணம் பாஜக எம்.பி. சன்னி தியோலுக்கு பிரசாரம் செய்தவரும், தேர்தல் பணியாற்றுவருமான நடிகர் தீப் சித்து என விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாடகரும் நடிகருமான தீப் சித்து, விவசாயிகளுக்காக சம்பு மோர்ச்சா என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.
மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடங்கியதும் இவரும் சம்பு எல்லையில் போராட்டத்தை தொடங்கினார்

ஆனால், பிற விவசாய அமைப்புக்கள் தீப் சித்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறி தங்களுடன் இணைத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. டெல்லி போலீஸ் அனுமதித்த பகுதியிலே டிராக்டர் பேரணியை நடத்த பிற விவசாயிகள் திட்டமிட்டிருந்த நிலையில், தீப் சித்து இளைஞர்களை தூண்டும் விதமாக பேசினார் என பிற விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பு எல்லையில் போலீஸ் தடுப்பை உடைத்துக்கொண்டு சென்றவர், செங்கோட்டையை நோக்கி இளைஞர்களை அழைத்துச் சென்றார் என்றும், அங்கு சீக்கிய மதக்கொடியை ஏற்ற செய்தார் என்றும் குற்றம் சாட்டு எழுந்துள்ளது. தேசியக்கொடியை அவமதிக்கும் எண்ணத்துடன் அரசியல் சக்திகளின் செயல்பாட்டில் நாங்கள் மிகவும் வேதனையடைந்து உள்ளோம் எனக் கூறியிருக்கும் விவசாயிகள், இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக தீர விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, பிரதமர் மோடியுடன் தீப் சித்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், பாஜக எம்.பி. சன்னி தியோல் தனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.  இதற்கிடையே, பேஸ்புக் லைவ் வீடியோவில் விளக்கம் அளித்துள்ள தீப் சித்து, செங்கோட்டையில் நிஷான் சாகிப் கொடியையே ஏற்றினோம் என்றும், இந்திய தேசியக் கொடி அகற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்