மேற்கு வங்க அரசு - மத்திய அரசு இடையே நீடிக்கும் பனிப்போரின் பின்னணி என்ன?

மேற்கு வங்க ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க அரசு - மத்திய அரசு இடையே நீடிக்கும் பனிப்போரின் பின்னணி என்ன?
x
மேற்கு வங்கத்தை சேர்ந்த மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை, உடனடியாக மாநிலப் பணியில் இருந்து விடுவிக்குமாறு, மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனநாயக விரோத சக்திகளிடம் தமது அரசு ஒருபோதும் அடிபணியாது என காட்டமாக விமர்சித்துள்ளார்.  

மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே நீடிக்கும் இந்த மோதல் விவகாரம், நாடு முழுவதும் பரபரப்பை பற்ற வைத்துள்ள நிலையில், இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்?...கடந்த பத்தாம் தேதி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மேற்கு வங்கம் சென்றிருந்த போது, டைமன்ட் ஹார்பர் பகுதியில் அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனம், மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது.   

இதனால் கொந்தளித்த பாஜக தரப்பு, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக விமர்சித்தது. இதுதொடர்பாக, மேற்கு வங்க ஆளுநர் சமர்ப்பித்த அறிக்கை அடிப்படையில், அம்மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியை நேரில் ஆஜராகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் ஆஜராகத் தேவையில்லை எனக் கூறி, மேற்கு வங்க அரசு மறுப்பு தெரிவித்தது. மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே மோதல் வலுக்க, இதுவே காரணமாக அமைந்தது. 

இதைத் தொடர்ந்து, ஜே.பி.நட்டாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, மேற்கு வங்க போலீஸ் ஐ.ஜி. ராஜீவ் மிஸ்ரா, டி.ஐ.ஜி. பிரவீன் குமார் திரிபாதி மற்றும் டைமன்ட் ஹார்பர் எஸ்.பி. போலாநாத் பாண்டே ஆகியோரை, மத்திய அரசுப் பணிக்கு மாற்றி, மத்திய உள்துறை உத்தரவிட்டது.  

இதுதொடர்பாக கடிதம் மூலம் அறிவுறுத்திய போதும், அதிகாரிகள் மூவரையும் மாநிலப் பணியில் இருந்து விடுவிக்க மேற்கு வங்க அரசு தயாராக இல்லை. மாறாக, இதனை மாநில அரசின் அதிகாரங்களை நசுக்கும் திட்டமிட்ட முயற்சி என விமர்சித்துள்ளார், முதலமைச்சர் மம்தா....

மேலும், தேர்தலுக்கு முன்பான இத்தகைய நடவடிக்கை ஜனநாயக விரோதமானது மட்டுமின்றி, கூட்டாட்சி அமைப்பின் அடிப்படை தத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் தீவிரமாக எதிர்த்துள்ளார். 

ஏற்கனவே, சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணைக்காக, கடந்த ஆண்டு கொல்கத்தா சென்ற சிபிஐ அதிகாரிகளை, மாநில காவல்துறை கைது செய்த விவகாரம், மத்திய, மாநில அரசுகளின் அதிகார மோதலாக வெடித்தது. 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த, வலியுறுத்துகிறது, பாஜக தரப்பு. மம்தாவும் தனது பிடியை விட்டுக் கொடுக்காமல், காய் நகர்த்துவதால், மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்