அப்துல் கலாமின் 89 வது பிறந்த நாள் இன்று...சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின், பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின், பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமது டிவிட்டர் பக்கத்தில், கலாமை நினைவு கூர்ந்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மறைந்த அப்துல் கலாம், நாட்டின் வளர்ச்சிக்கு விஞ்ஞானியாகவும், குடியரசுத்தலைவராகவும் அரும்பணி ஆற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
"காலத்தால் அழியாத அப்துல் கலாம் - அவரை வணங்கி போற்றுகிறேன்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் கருத்து
அப்துல் கலாமின் 89-வது பிறந்த நாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் எனமுதலமைச்சர் பழனிசாமி டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில்,
"கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்" என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் அப்துல்கலாம் என புகழாரம் சூட்டியுள்ளார். காலத்தால் அழியாத அப்துல் கலாமின், பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
"அரசியலுக்கு வரவைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்" - அப்துல்கலாமிற்கு கமல்ஹாசன் புகழாரம்
என்னை அரசியலுக்கு வரவைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் அப்துல்கலாம் என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி, ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், அப்துல்கலாமின், சாதனைகளும், தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரை நல்வழிப் படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அப்துல்கலாமின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.
அப்துல்கலாம் பிறந்தநாள் விழா - நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர், குடும்பத்தினர் அஞ்சலி
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாள் விழாவை ஒட்டி ராமேஸ்வரம் பேய்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அப்துல்கலாமின் குடும்பத்தினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படவில்லை.
Next Story

