நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்கள் - பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையிலிருந்து சிரோமணி அகாலிதளம் திடீரென விலகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்கள் - பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு
x
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் சிரோமணி அகாலிதள கட்சி அங்கம் வகித்து வருகிறது. 2 எம்.பி.க்களை கொண்ட அக்கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய உணவு பதப்படுத்துதல்துறை அமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தமது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியிலிருந்து விலகியதாகவும் , விவசாயிகளின் மகளாகவும், சகோதரியாகவும் இருப்பதில் தாம் பெருமை கொள்வதாகவும் ஹர்சிம்ரத் கவுர் பாதல்  தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமரின் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டார். 

கடந்த 14ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று மக்களவையில் விவசாய விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகியவற்றை மத்திய அரசு தாக்கல் 
செய்தது.  ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட வேளாண்துறை தொடர்பான அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த மசோதாக்கள்  தாக்கல் செய்யப்பட்டன.  

இது தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற 
விவாதத்தின் போது பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து கிடைக்கும் என்றும்  விளக்கம் அளித்தார். 

ஆனாலும் வேளாண் மசோதாக்களுக்கு பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் 
கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அமைச்சரவையிலிருந்து  சிரோமணி அகாலிதளம் விலகினாலும் பிரதமர் மோடி தலைமையிலான 
பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தொடரும் என்று சிரோமணி அகாலிதளம்  கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். 

பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு  வழிவகுக்கும் என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் நேற்று வெளிநடப்பு செய்த போதும் , குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம் இடைத் தரகர்களிடம் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விளை பொருட்களை சந்தைப்படுத்த உள்ள தடைகளையும் இந்த மசோதாக்கள் நீக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்