ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரை
ஐ.நா. அவையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்ற உள்ளார்.
ஐ.நா. அவையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உயர்மட்டக் கூட்டத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். உயர்மட்டக் குழு கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியில் நார்வே பிரதமர் மற்றும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருடன் இணைந்து பிரதமர் உரையாற்றவுள்ளார்.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் உரை இது என்பதால், பல்வேறு சிறப்புக்களை பெற்றுள்ளது. ஐ.நா. சபை உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருணத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. ஐ.நா அவையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலின் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் நிலையில், நடப்பு ஆண்டில் "கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய பன்முகத்தன்மை: 75 வது ஆண்டில் எத்தகைய ஐ.நா. அவை உலகுக்கு தேவை" என்பதை பேசுபொருளாகக் கொண்டு கூட்டம் நடத்தப்படுகிறது கொரோனா தொற்றால் சர்வதேச சூழல் மாறி வரும் நிலையில், பன்முகத்தன்மையை வளர்த்தெடுப்பதை நோக்கமாக கொண்டு இந்த கூட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் முன்னுரிமையை இந்தியா எதிர்நோக்கியிருக்கும் நிலையில், பிரதமர் தமது உரையில் பன்முகத்தன்மையை வலியுறுத்தும் கருத்துக்களை முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

