உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த போது அமித்ஷா கைது - பழிவாங்கல் என குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் : தொடர்பு என்ன?

அமித்ஷா கைதுக்கு பழிவாங்கும் விதமாகவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப தொடங்கியிருக்கின்றன.
உள்துறை அமைச்சராக சிதம்பரம் இருந்த போது அமித்ஷா கைது - பழிவாங்கல் என குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் : தொடர்பு என்ன?
x
குஜராத்தில் பிரதமராக இருந்த மோடியை  கொலை செய்ய சதி செய்ததாக,  2005 ஆம் ஆண்டில் சொராபுதீன் ஷேக் உள்ளிட்ட மூன்று பேரை குஜராத் போலீசார் என்கவுண்ட்டர் செய்தனர். அவர்கள் போலி என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என குற்றச்சாட்டு எழுந்ததால், வழக்கு விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. 2010 ஆம்  ஆண்டில் சிபிஐ வழக்கை விசாரிக்க தொடங்கியபோது,  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவர், ப. சிதம்பரம். அந்த வழக்கில், குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா உள்பட 33 பேர் மீது குற்ற பத்திரிகை 2010 ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  ஜூலை 25 ஆம் தேதி சிபிஐ அமித்ஷாவை கைது செய்தது. 3 மாதங்கள் கழித்து, அக்டோபர் 29 ஆம் தேதி குஜராத் உயர்நீதிமன்றம், அமித்ஷாவுக்கு ஜாமீன் வழங்கினாலும், அவரை குஜராத்தை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு காரணமாக  2 ஆண்டுகள் டெல்லிக்கு இடம் பெயர்ந்து குஜராத் பவனில் வசித்து வந்த அமித்ஷா,  2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னர்தான் குஜராத் திரும்ப முடிந்தது.
இந்த சம்பவங்கள் நடந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் அமித்ஷா. இதை வைத்து தான், அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், அதை பாஜக திட்டவட்டமாக மறுக்கிறது. 4 முறை நிதி அமைச்சராக பதவி வகித்ததுடன், நாட்டின் உள்துறை அமைச்சராக 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை  சி.பி.ஐ- ஐ தனது  கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், ப.சிதம்பரம். அதே சி.பி.ஐ. அமைப்பால் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 9 ஆண்டுகளுக்கு முன்னர் அமித் ஷா கைது செய்யப்பட்டதையும், தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதையும் முடிச்சு போட்டு வரலாறு திரும்புவதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...


Next Story

மேலும் செய்திகள்