பிரதமர் மோடி - ப. சிதம்பரம் முற்றி நிற்கும் வார்த்தைபோர்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை மையமாக வைத்து டெல்லி அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கும், சிதம்பரத்திற்கும் இடையிலான அரசியல் போர் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...
பிரதமர் மோடி - ப. சிதம்பரம் முற்றி நிற்கும் வார்த்தைபோர்...
x
கடந்த மக்களவை தேர்தலின் போது, தமிழகத்தில் திருப்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ப. சிதம்பரத்தை விமர்சிக்கும் விதமாக,  மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் என்று கடுமையாக சாடினார். அப்போது, தந்தை நிதியமைச்சர் என்றும், மகன் முறைகேடுகளை செய்கிறார் என்றும் விமர்சனம் செய்திருந்தார். ஜாமீனில் மட்டுமே வெளியே இருக்க முடியும் எனவும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி கடுமைாக சாடி பேசியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளம் மூலம் பதிலளித்த ப. சிதம்பரம், எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்று இன்றைய ஆட்சியாளர்களை கருத்தில் கொண்டு அன்றே திருவள்ளுவர் சொன்னாரோ? என பதிலடி கொடுத்தார். 

சட்டம் தொடர்பாக சில அடிப்படை பாடங்களை சட்டத்துறை செயலாளர் பிரதமர் மோடிக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஜாமீன் என்பது சட்ட விதிகளின் படி வழங்கப்படுவது என்றும் சிதம்பரம் குறிப்பிட்டிருந்தார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர், பக்கோடா விற்பனை செய்யும் ஒருவர் வீட்டிற்கு 200 ரூபாய் கொண்டு சென்றால் அதையே வேலை வாய்ப்பாக கருத வேண்டுமா...? இல்லையா..? என கூறியிருந்தார். அதை விமர்சித்த ப சிதம்பரம், பக்கோடா விற்பனை செய்வதை வேலைவாய்ப்பு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள வகையில், பார்த்தால் பிச்சை எடுப்பதும் வேலைதான் என்றும் விமர்சனம் செய்தார். 2014 மக்களவை தேர்தலில், ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் அளிப்பதாக சொன்னரே செய்தாரா என்றும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தந்தவர் மோடி என்றும் சிதம்பரம் கடுமையாக தாக்கி பேசினார். 

ரூபாய் நோட்டு நடவடிக்கையில், ஒரு ஆண்டு நிறைவு நாளில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிதம்பரம், ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு அரசு என்ன காரணத்தை கூறினாலும் அது முட்டாள்தனமானது என்று விமர்சித்தார். திருப்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பணமதிப்பு நீக்கத்தால் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் பாஜக அரசை தாக்கி பேசினார். கடந்த ஏப்ரல் மாத தேர்தல் பிரசாரத்தின் போது,  5 ஆண்டுகளில் இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதலே நடைபெறவில்லை என மோடி பேசிய நிலையில், அதை ப.சிதம்பரம் விமர்சித்தார். பல வெடிகுண்டு சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை பிரதமர் மோடி மறந்துவிட்டதாகவும், இதற்கு மோடியின் ஞாபக மறதி காரணமா அல்லது வழக்கம் போல் பொய் சொல்லும் குணம் காரணமா எனவும் கேள்வி எழுப்பினார்.  

கஜா புயல் பாதிப்பிற்கு ஆறுதல் கூட தெரிவிக்காத பிரதமர் மோடியை, தமிழக மக்கள் ஒரு போதும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள் என்றும் சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார். உலகம் சுற்றும் வாலிபன் என்று பட்டம் பெற்ற பிரதமர் மோடி ஒருவழியாக தமிழகத்தின் மீது கடைக்கண் பார்வை காட்டி வருகை தந்துவிட்டார் என்று 2015 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார். ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றிய ரகுராம் ராஜன், இரண்டாவது முறையாக பொறுப்பு வகிக்க மறுத்த நிலையில்,  ரகுராம் ராஜன் போன்ற ஒருவரை  பெற மோடி அரசு தகுதியுடையதுதானா என சிதம்பரம் அதிரடியாக கேள்வி என்றை எழுப்பி பரபரப்பை கூட்டினார்.

மக்களவை தேர்தல் பிரசார பரபரப்புகிடையே தினத்தந்திக்காக பிரதமர் மோடி நேர்காணல் அளித்தார். அப்போது , தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்குமா? அதன் நிலை என்னவாகும்? என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு  பதிலளித்த பிரதமர்,  நரேந்திர மோடி மீதே குற்றச்சாட்டு எழுந்தாலும் அவர் முழுமையாக விசாரிக்கப்படுவார். விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது என்று கூறினார். இதற்கு செய்தியாளர் சந்திப்பில் விமர்சனம் செய்த ப. சிதம்பரம், கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத பிரதமர் என்றும், உண்மைக்கு புறம்பாக, முரண்பாடாக பேசுகிறார் என்றும் காட்டமாக கூறினார். இப்படி பிரதமர் மோடி மற்றும் ப.சிதம்பரம் இடையிலான வார்த்தை போர் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது என்பதை மறுப்பதற்கில்லை.

Next Story

மேலும் செய்திகள்