காஷ்மீர் ஓட்டலில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பதிவு

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகர் பிரகாஷ்ராஜ், காஷ்மீரில், செல்ஃபி எடுக்க அனுமதித்ததால் தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் ஓட்டலில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பதிவு
x
தனியாக கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ்,  ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வருவதுடன் பாஜக எதிர்ப்பு அரசியலிலும் ஈடுபட்டு வருவதுடன் பாஜகவுக்கு எதிரானவன் என்று பகிரங்கமாக கூறி வருகிறார். பிராகாஷ்ராஜ் அரசியலில் இறங்குவதற்கு முக்கிய காரணம், அவரது நண்பரும் எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் வலதுசாரி அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்தான். 

கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல் என்று அப்போது பேசிய அவர், கௌரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாகவும் இதுபோன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர் என்றும் விமர்சனம் செய்தார். 

தனக்கு வழங்கப்பட்ட 5 தேசிய விருதுகளை திருப்பித்தர தயங்க மாட்டேன் என்றும் பிரகாஷ்ராஜ் கூறினார். அதனைத் தொடர்ந்து, டிவிட்டரில், ஜஸ்ட் ஆஸ்கிங் என்கிற ஹேஷ்டேக் மூலம் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளும் பாஜக அரசுக்கு  கேள்விகளை கேட்டு வருகிறார்.


நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த அவர் நடிகர்கள் தங்களின் பிரபலத்தின் காரணமாக மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் இந்த நாடு சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து சரியான புரிதல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். வாக்காளர்கள் ரசிகன் என்ற மனநிலையோடு வாக்களிக்காமல், பொறுப்பான குடிமகனாக வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். 

பின்னர் அரசியலில் இறங்குவதாக அறிவித்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். தேர்தலில் தோல்வியை தழுவினாலும் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில்தான் கோடை விடுமுறையை கழிக்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

அங்கு தங்கியிருந்த இடத்தில் மோடி ஆதரவாளர் குடும்பத்துடன் நடந்த சம்பவத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஹோட்டலில் இருந்து வெளி வரும்போது, ஒரு பெண்ணும் அவரது மகளும் அவருடன் செல்பி எடுத்துள்ளனர். அதை பார்த்த அந்த பெண்ணின் கணவர், மோடியை எதிர்ப்பாளருடன் எப்படி செல்பி எடுக்கலாம் என தனது மனைவியை எல்லோர் முன்னிலையிலும் கண்டித்துள்ளார். 

அவமானம் அடைந்த மனைவியும், மகளும் அங்கேயே அழ ஆரம்பித்துள்ளனர். அதையடுத்து அந்த பெண்ணின் கணவரை தனியே அழைத்த பிரகாஷ்ராஜ் என்னையும் மோடியையும் முன்னாடி வைத்துக்கொண்டா திருமணம் செய்தீர்கள் என்றும் பொது இடத்தில் மனைவியை அசிங்கப்படுத்துவது தவறு என்றும் கண்டித்துள்ளார். அதையடுத்து அந்த குடும்பத்தினர் வெளியேறினாலும், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்