சரித்திரத்தில் இடம் பெறுவாரா சந்திரசேகர ராவ்?

3வது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் சந்திரசேகர ராவ் யார்? அவரின் அரசியல் பின்புலம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்...
சரித்திரத்தில் இடம் பெறுவாரா சந்திரசேகர ராவ்?
x
ஒரு மாநிலத்தின் தலைவராக ஒருவர் கொண்டாடப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் மற்ற மாநிலங்களிலும் அவர் பேசுபொருளாக இருப்பது நிச்சயம் அவருக்கான அடையாளமாகவே அது கருதப்படும். அப்படி ஒரு தலைவராக இருக்கிறார் சந்திரசேகர ராவ். கேசிஆர் என மக்களால் அழைக்கப்படும் ஒரு தலைவர் இவர். 

ஒருங்கிணைந்த ஆந்திராவின் வசமிருந்த மேடக் மாவட்டத்தில் 1954ல் பிறந்தவர் சந்திரசேகர ராவ். ஆரம்ப காலத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் பயணத்தை துவக்கினார் சந்திரசேகரராவ். அதன்பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் 1983ல் இணைந்த சந்திரசேகரராவ், சித்திப்பேட் என்ற தொகுதியில் இருந்து தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஒருங்கிணைந்த ஆந்திராவில் என்.டி.ராமாராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையிலும் பதவி வகித்தவர் கே.சி.ஆர். ஆந்திர சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் பதவியிலும் இருந்தவர் இவர். 2001 ல் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி தனித் தெலங்கானா கோரிக்கையை மையப்படுத்தி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற கட்சியை துவக்கினார். 2004 ல் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார் சந்திரசேகரராவ். 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தெலங்கானா அமைக்கப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்ததால் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்ததாக  கேசிஆர் விளக்கம் அளித்தார். அந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 5 இடங்களை கைப்பற்றியதோடு, குறிப்பிடத்தக்க அளவில்  இந்த கூட்டணி வெற்றியும் பெற்றதால் சந்திரசேகர ராவ் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் தனிமாநில கோரிக்கையை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை என கூறி 2006ல் அமைச்சரவையில் இருந்தும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் விலகினார்.

மேலும் எம்.பி. பதவியையும் தூக்கி எறிந்த சந்திரசேகர ராவ் மீது மக்கள் நம்பிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதுபோன்ற காரணங்களால் அவரின் பின்னால் மக்கள் அணி அணியாக திரள ஆரம்பித்தனர். 2009 ல், தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி அவர் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நிலை மோசமான நிலைக்கு சென்றது. அந்த காலகட்டத்தில் தெலங்கானா பகுதியே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டமும் விஸ்வரூபம் எடுத்தது. 

அரசு ஊழியர்கள், மாணவர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் அவருக்கு ஆதரவளிக்க மத்திய காங்கிரஸ் அரசு சந்திரசேகரராவின் கோரிக்கைக்கு பணிந்தது.சந்திரசேகரராவின் அயராத முயற்சியால் ஒருவழியாக 2014 ல் தெலங்கானா மாநிலம் உதயமானது. அதை தொடர்ந்து நடந்த  மாநிலத்தின் முதல் சட்டப்பேரவை தேர்தலில் அபார வெற்றிபெற்று  சந்திரசேகரராவ் முதலமைச்சரானார். 

தெலங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சர் என வரலாற்றிலும்  இடம்பிடித்தார் கேசிஆர் ஆட்சி காலம் முடிய 9 மாதங்களுக்கு முன்பாகவே சட்டப்பேரவையை கலைத்துவிட்டு கடந்த ஆண்டு தேர்தலை சந்தித்தார். எதிர்பார்த்தது போலவே அமோக வெற்றி பெற்று 2 வது முறையாக முதலமைச்சர் அரியணையை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார் சந்திரசேகரராவ். 

விவசாய கடன் தள்ளுபடி ஏரி குளங்கள் புனரமைப்பு 24 மணிநேரமும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என இவரின் பல்வேறு திட்டங்களும் தெலங்கானா மக்களை பெரிதும் கவர்ந்துவிட்டன. 
மானிய விலையில் விவசாயிகளுக்கு ஆடு, எருமை, மீன்குஞ்சுகள் வழங்கியதும் இவரது குறிப்பிடத்தக்க திட்டம். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில்  சந்திரபாபு நாயுடுவையே மிஞ்சும் வகையில் சந்திரசேகர ராவ் செயல்படுவதாக மக்களிடையே நல்ல பெயரும் இவருக்கு உள்ளது. 

தொழில் துவங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் தெலங்கானா, நாட்டிலேயே முதலிடத்தை பிடித்ததாக 2017 ல், ஒரு ஆய்வு முடிவில் தகவல் வெளியானது. ஜோதிடம், வாஸ்து, நியூமராலஜி என அனைத்திலும் நம்பிக்கை நிறைந்தவர் கேசிஆர். தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், உருது என 4 மொழிகளிலும்  வல்லமை மிக்கவர் இவர். அதேநேரம் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் போன்ற குற்றச்சாட்டுகளும் இவர் மீது அடுக்கடுக்காக வந்தன. 

இவரது மகன்  ராமாராவ் மாநிலத்தின் முக்கிய அமைச்சராக இருக்கிறார். மகள் கவிதா எம்.பி.யாக உள்ளார்.. கே.சி.ஆரின் நெருங்கிய உறவினர் ஹரிஷ் ராவ்  தெலங்கானா அமைச்சராக இருக்கிறார். தெலங்கானா உதயமான பின் தனிக்காட்டு ராஜாவாகவே களம் கண்டு வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் கேசிஆர் மக்களவை தேர்தலையும் தனித்தே எதிர்கொண்டார். இந்த நிலையில் மாநிலக் கட்சிகளில் தனித்துவம் பெற்ற ஒரு தலைவராக இருக்கும் கேசிஆர் 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 

மாநிலங்களில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சித் தலைவர்களை சந்திக்கும் அவர் மகா கூட்டணி அமைத்தால் பிரதமர் வேட்பாளராக தன்னையே முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார். அரசியல் சூழலை எதிர்கொள்ளும் சாமர்த்தியம், பன்மொழித் திறமை, தொலைநோக்கு பார்வை, மாநிலத்தில் செல்வாக்கு என எல்லாமே சாதகமாக இருப்பதால் வருங்கால அரசியல் சந்திரசேகரராவுக்கு நிச்சயம் பூங்கொத்துகளுடன் காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை... 

Next Story

மேலும் செய்திகள்