அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது : பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
வேலைநிறுத்த போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்து உரிய முடிவை அரசு எடுக்கும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் பிரச்சினை குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது , போராட்டம் நடத்தியவர்களிடம் முதலமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த முன்வராதது ஏன் என கேள்வி எழுப்பினார்.. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் . அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , தமிழக அரசின் வேண்டுகோளையும் , உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்ததாகவும் ஜெயகுமார் தெரிவித்தார். மொத்தம் 86 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும் 6527 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர், வழக்கின் தன்மையை ஆய்வு செய்து அரசு உரிய முடிவை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
Next Story