'மோடியா? லேடியா?' - மோடிக்கு 3 லேடிகள் சவால்

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு சவாலாக, 3 பெண்கள் களமிறங்கி உள்ளனர்.
மோடியா? லேடியா? - மோடிக்கு 3 லேடிகள் சவால்
x
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், மோடி தலைமையில் பாஜக களமிறங்கியபோது, '272 பிளஸ்' என்ற கோஷம் முன் வைக்கப்பட்டது. 'தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி' என்பதே அதற்கு அர்த்தம். 10 ஆண்டுகளாக நீடித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் மீதிருந்த அதிருப்தியால், இந்தியா முழுவதும் மோடி அலை உச்சத்தில் இருந்தது. ஆனால், தமிழகத்தில் மட்டும் மோடிக்கு எதிராக குரல் எழும்பியது. அது, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல். தேர்தல் பிரசார மேடைகளில், 'லேடியா...? மோடியா...?' என ஜெயலலிதா எழுப்பிய கோஷம், தமிழகத்தில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலையில், எதிர்க்கட்சிகள் அடித்துச் செல்லப்பட்ட போதிலும், தமிழகத்தில் மட்டும் 39க்கு 37 தொகுதிகளை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கைப்பற்றியது. 5 ஆண்டுகள் முடிந்த நிலையில், தற்போதைய தேர்தல் களத்தில் ஜெயலலிதா இல்லை. ஆனால், மோடிக்கு எதிராக 3 லேடிகள் ​சிம்ம சொப்பனமாக எழுந்துள்ளனர். கடந்த தேர்தலின்போது, உத்தரபிரதேசத்தில் 80க்கு 71 தொகுதிகளை கைப்பற்றிய மோடியால் இந்த முறை அது சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறி. காரணம், மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, இதுவரை அந்த மாநிலத்தில் எலியும் பூனையுமாக இருந்த  சமாஜ்வாதி கட்சியுடன் கைகோர்த்து பலம் வாய்ந்த அணியை உத்தரபிரதேசத்தில் அமைத்திருக்கிறார். 'உ.பி.யைச் சேர்ந்தவர் தான், அடுத்த பிரதமர்' என கூறி வரும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்களில் கணிசமான வெற்றியை பெற்றதும் கவனிக்கத்தக்கது. மாயாவதிக்கு அடுத்ததாக மோடியை தீவிரமாக எதிர்க்கும் பெண் தலைவர் மம்தா பானர்ஜி, கடந்த மாதம் கொல்கத்தாவில் 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்களை திரட்டி பெரிய பொதுக்கூட்டத்தை நடத்திக் காட்டியவர். தற்போது, சிபிஐ அதிகாரிகளையே கைது செய்து மத்திய அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டதோடு, தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் அவரது போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தில் கடந்த முறை கால் பதித்து 2 தொகுதிகளை வென்ற பா.ஜ.க.வுக்கு, மம்தா பானர்ஜியின் இந்த புதிய அவதாரம், கடுமையான சவாலை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். மோடிக்கு எதிராக களம் இறங்கியுள்ள 3-வது பெண் தலைவர் பிரியங்கா காந்தி. 47 வயதாகும் இவருக்கு, ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக பிரசாரம் செய்த அனுபவம் உள்ளது. மிகச் சிறந்த பேச்சாளர். இவருக்கு, தற்போது கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்காவை, அவரது பாட்டியான இந்திரா காந்தியின் மறு உருவமாகவே காங்கிரஸ் தொண்டர்கள் பார்க்கின்றனர். அவரது பொறுப்பில் 40 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதனால், உத்தரபிரதேசத்தில் கடந்த தேர்தலை போல, ஏகபோகமான வெற்றியை பிரதமர் மோடியால் அள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மோடிக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்து வரும் நிலையில், மாயாவதி, மம்தா போன்றவர்கள் தனித்தனியாக பிராந்திய கூட்டணியை அமைப்பதால், தேசிய அளவில் பெரிய தாக்கம் ஏற்படாது என்றே தெரிகிறது. எனினும், மிகவும் சவாலான இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியையும் முக்கியமாக பாஜக கருதுவதால் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் 3 லேடிகளும் மோடிக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என்ற அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்