திருக்குவளை முதல் கோட்டை வரை : கருணாநிதி கடந்து வந்த பாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு
திருக்குவளை முதல் கோட்டை வரை : கருணாநிதி கடந்து வந்த பாதை
x


தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் கருணாநிதி. பொது வாழ்வில் பவள விழா கண்டவர். 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்த இவர்,  போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என் பெருமைக்கு சொந்தக்காரர். 

நாகை மாவட்டம், திருக்குவளையில் மிகவும் எளிய குடும்பத்தில் 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி பிறந்தார் கருணாநிதி. முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்கு, பிறந்த இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.


திருக்குவளை தொடக்கப்பள்ளி, திருவாரூர்  உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற கருணாநிதி, நாடகம், கவிதை, பேச்சில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

1937-ல் ஆட்சியில் இருந்த ராஜாஜி அரசு, அரசுப்பள்ளிகளில் இந்திப் படிப்பைக் கட்டாயமாக்கிய போது, அதைக் கண்டித்து, அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான நீதிக்கட்சி தொடர் போராட்டங்களை நடத்தியது. இதனால், 12 வயதிலேயே போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து,இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு' என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 

இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார். போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்ட அந்த சிறு வயதிலேயே `"மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். 17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார்.  

பின்னர், படிப்படியாக அரசியலில் நுழைந்த அவர், 1957-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டார். 

1962-ல் தஞ்சாவூர் தொகுதியிலும், 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டையிலும், 1977 மற்றும் 1980 தேர்தல்களில் அண்ணா நகர் தொகுதியிலும், 1989 மற்றும் 1991 தேர்தல்களில் துறைமுகத்திலும் 1996, 2001 மற்றும் 2006 தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. 

2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திருவாரூர் தொகுதியிலும் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றார்.  2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி தோற்கடித்தார். இது மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசமாகும்.

1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களைப் பிடித்து முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அப்போது, அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். அண்ணாவின் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, அண்ணாவின் மறைவுக்குப்பின்,  முதலமைச்சராக பதவி ஏற்றார்.


1969 ஆம் ஆண்டில் இருந்து 1971 வரையிலும், 1971 ஆம் ஆண்டில் இருந்து 1976 வரையிலும் , 1989 ஆண்டிலிருந்து 1991 வரையிலும், 1996 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையிலும், 2006 ஆம் ஆண்டிலிருந்து 2011 வரையிலுமான  காலக்கட்டங்களில் திமுக சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகித்தார் கருணாநிதி. 

இரண்டு முறை இவரது ஆட்சியை மத்திய அரசு கலைத்துள்ளது. 1972 அக்டோபர் 14-ல் கட்சிப் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இது, கருணாநிதி தலைமையிலான திமுகவில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவாக கருதப்பட்டது.  

1975, ஜூன் 25 நள்ளிரவில் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. 1976, ஜனவரி 31-ம் தேதி தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்தது மத்திய அரசு. அன்று இரவே ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டு மிசா சட்டத்தின் கீழ் விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த வந்த அரசியல் பாதையில், தமிழகத்திற்கு செய்த பணிகள் எண்ணிலடங்காதவை. 

சுதந்திர தினத்தன்று கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதலமைச்சர்களுக்கு அந்த உரிமையை பெற்று தந்தவர், கருணாநிதி. 


தனியார் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கி, சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், திருவள்ளுவர் பெயர்களில் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார். குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி ஏழை மக்களும் மாடி வீடுகளில் வசிக்கும் வாய்ப்பை உருவாக்கினார். மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்‌ஷாவை ஒழித்து, இலவசமாக சைக்கிள் ரிக்‌ஷா வழங்கினார். 

தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்காக 20% இட ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்கள் கருணாநிதியின் சாதனை முத்திரையின் முக்கிய அம்சங்கள்.

கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்திய பெருமை கருணாநிதிக்கு உண்டு. சமத்துவபுரங்கள், உழவர்சந்தைகள், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதம் மகளிருக்கு இட ஒதுக்கீடு,  மினி பேருந்துகள் இயக்கம் என பல்வேறு வசதிகளும், தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பார்க் என்னும் கணினி மென்பொருள் பூங்காவை கொண்டு வந்தார். உலகத் தமிழ் இணைய பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். தமிழ்விசை பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை நடத்தினார் கருணாநிதி. 

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கும் முறையை தொடங்கி வைத்தார். தமிழைச் செம்மொழியாக அறிவிக்க செய்தார். தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார்.

90 வயதை கடந்தும், உற்சாகம் குறையாமல் அரசியல் கூட்டங்கள், கட்சிப்பணி, என அவரது உழைப்பு இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைந்தது. 

சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும், கடினமாக உழைத்தால், மிக உயரிய பதவியை எட்டி பிடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர், கருணாநிதி.

தமிழக அரசியல் வரலாறு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, கருணாநிதியை சுற்றியே வலம் வந்தது. மொத்தத்தில் அரசியல் வரலாற்றில் கருணாநிதி ஓர் அச்சாணி என்றே சொல்லலாம்.


Next Story

மேலும் செய்திகள்