பிரிட்டனை சேர்ந்த ஜோசப் பிளாவில் என்ற சிறுவன் கடந்த ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற நிலையில், அவருக்கு கொரோனாவைப் பற்றி எதுவுமே தெரியாது என்று சிறுவனின் உறவினர் உருக்கத்துடன் கூறி உள்ளார்.
தற்போது அந்த சிறுவன், கோமாவில் இருந்து மீண்டு வருவதாகவும், கொரோனாவால் இருமுறை பாதிக்கப்பட்டது கூட அந்த சிறுவனுக்கு தெரியாது என்றும் அவர் கூறி உள்ளார். சிறுவனின் மருத்துவ செலவுக்கு நிதி உதவி அளிக்குமாறும் சமூக வலைத்தளங்களில் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
சீனாவில் ஆஸி. ஊடகவியலாளர் கைது - உளவு பார்த்ததாக சீனா குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரை சீன அரசு கைது செய்து உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் செங் லீ, சீன அரசின் தொலைக்காட்சியில், தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு இவர் காணாமல்
போனதாக கூறப்பட்ட நிலையில், உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி, சீன அரசு அவரை கைது செய்து உள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரைஸ் பயனே அதிகாரப்பூர்வமாக கூறி உள்ளார்.
வாகனத்தை வழிமறித்த சிங்கம் - ஆர்வத்துடன் பார்த்த சுற்றுலாப் பயணிகள்
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் செரங்கதி, வன உயிரின பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் ஏராளமான வன விலங்குகள் உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனத்தை சிங்கம் ஒன்று வழி மறித்து உள்ளது. வாகனத்தை வழிமறித்த சிங்கம், தனது முகத்தை, வாகனத்தில் உரசிய நிலையில், சிங்கத்தை அச்சம் கலந்த ஆர்வத்துடன் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.
நாய்களுக்கு பந்துகளை பரிசளித்த உரிமையாளர் - பந்துகளைப் பார்த்து பரவசமடைந்த நாய்கள்
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சம்மர் வில்லி நகரில் வசிக்கும் ஒருவர், தனது வளர்ப்பு நாய்களுக்கு டஜன் கணக்கில் டென்னிஸ் பந்துகளை பரிசளித்து உள்ளார். நாய்கள் முன்னிலையில், பந்துகளை அவர் கொட்டிய நிலையில், பந்தைப் பிடித்து நாய்கள் உற்சாகமாக விளையாடின.
ஒலிம்பிக் போட்டி: பெரும்பாலானோர் எதிர்ப்பு - டோக்கியோ கருத்துக்கணிப்பில் தகவல்
ஜப்பானில் கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா காரணமாக வரும் ஜுலை 23ல் தொடங்கவுள்ளது. சமீபத்தில், இது குறித்து டோக்கியோவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பெரும்பாலான ஜப்பானியர்கள், ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில்,61 சதவீதம் பேர், ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒலிம்பிக்கை நடத்துவதற்கு, 36 சதவீதம் பொதுமக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - ராணுவத்துக்கு எதிராக செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
மியான்மரில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம், ஓராண்டுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், யாங்கோன் நகரில் திரண்ட ஏராளமான செவிலியர்கள், ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும், ராணுவ ஆட்சியை அகற்றவும் தாங்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.