டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு விவகாரத்தில் சர்ச்சையை எதிர் கொண்டிருக்கும் கிரேட்டா தன்பெர்க் யார்...? என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...
இந்த பூமியில் ஜனனிக்கும் குழந்தையொன்று, ஆரோக்கியமாக வாழ இயற்கையை தன்னிடம் பாதுகாப்பாக கொடுங்கள் என்று கேட்பது போல்தான் இவரது போராட்டம்.பூவி வெப்பமையமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால், வெள்ளம் - வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகள் இப்போதே மனித குலத்தை ஆட்டிப்படைக்க தொடங்கிவிட்டது இதனை கவனிக்க தவறும்பட்சத்தில் பேரழிவு நிச்சயம் என எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.இந்தநிலையில் பூமியில் இளைய சமூதாயத்திற்கான உரிமையை காக்க ஒரு திசைக்காட்டியாக எழுந்து நிற்கிறார் கிரேட்டா தன்பெர்க்.இவர் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி பிரபல நாடக நடிகர் ஸ்வண்ட் மற்றும் ஒபேரா பாடகர் மலேனா தம்பியினருக்கு மகளாக பிறந்தார். சுட்டி குழந்தையாக பள்ளிக்கு சென்றவரின் நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டது இதுகுறித்து ஆசிரியர்கள் எச்சரிக்கவும் கிரேட்டாவை பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவருக்கு ஆஸ்பெர்ஜர்ஸ் சிண்ட்ரோம் இருப்பது தெரியவந்துள்ளது.இதனால் பாதிக்கப்படும் சிறுவர்கள், தாங்கள் கவனம் விரும்புவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். நாட்கள் ஓடிய நிலையில் அவருடைய கவனம் பருவ நிலையை காப்பாற்றுவதை நோக்கியது.
பொருளாதாரத்துக்கும் - அறநெறிகளுக்கும் உள்ள தொடர்பு அறவே துண்டிக்கப்பட்டு இயற்கை அழிக்கப்பட்டதை கண்டித்து கட்டுரைகளை எழுத தொடங்கினார்.ஸ்வென்ஸ்கா டாக்லாடெட் பத்திரிக்கையில் கிரேட்டா எழுதிய கட்டுரைகளை பார்த்து சூற்றுசூழல் ஆர்வலர்கள் தங்களுடைய கூட்டங்களில் பேச செய்தனர். 2018 ஆகஸ்ட்டில் 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவர் தனிப்பட்ட ஈடுபாடுடன் போராட்டத்தில் களமிறங்கினார். சுவீடன் 262 ஆண்டுகளில் மிகக்கொடிய வெப்பத்தை எதிர்க்கொண்ட காலத்தில் நாடாளுமன்றத்தில் அவருடைய போராட்டம் ஆரம்பித்தது. பாரிஸ் பருவ நிலை ஒப்பந்த விதிகளை கடைபிடிக்க கோரிய அவருடைய போராடம் உலகமெங்கும் கவனம் பெற்றது. 'பிரைடே பார் பியூச்சர்'(Friday For Future) என்ற அமைப்பினை தொடங்கி உலகம் முழுவதும் உள்ள மாணவர்களை சுற்றுசூழல் போராட்டத்தில் களமிறங்கினர்
தம்மிடமிருந்து எதிர்காலம் பறிக்கப்படும் சூழலில்... எதற்காக படிக்க வேண்டும்...? என்ற அர்த்தம் கொண்ட அவருடைய கோபத்திற்கு உலகம் முழுவம் ஆதரவு கிடைத்தது. 2019 செப்டம்பரில் நியூயார்க்கில் பருவநிலை மாநாட்டில் அவர் உலக தலைவர்களை நோக்கி கோபமாக உதிர்ந்த வார்த்தைகள் இது உங்களுடைய வெற்று வார்த்தைகளால் என் கனவுகளையும், குழந்தை பருவத்தையும் திருடிவிட்டீர்கள். முழு சுற்றுச்சூழல் அமைப்புகளும் இருந்தும் மக்கள் இறந்து வருகிறார்கள். பெரிய அழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பேசக்கூடியது பணம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் கதைகளைதான் என்று பேசினார்.இறுதியில் உங்களுக்கு எவ்வளவு தைரியம் என்று அவர் சீற்றத்துடன் எழுப்ப்பிய கேள்வி உலகம் முழுவதும் பேசப்பட்டது. கிரேட்டா படத்தை அட்டையில் வெளிட்ட டைம் இதழ், அடுத்த தலைமுறைக்கான தலைவர் என புகழாரம் சூட்டியது.
18 வயதாகும் கிரேட்டா தன்பெர்க், மனிதகுலம் மற்றும் பிற உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் பருவநிலை மாற்றம் விவகாரத்தில், உலக நாட்டு தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார். தனது தார்மீக நடவடிக்கையால் உலக தலைவர்களை உலுக்குபவராக உருவெடுத்து இருக்கும் இவரது பெயர் 2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுப் பரிந்துரையில் இடம்பெற்றிருக்கிறது. தற்போது டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு விவகாரத்தில் இந்தியாவில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.