இன்று அண்ணாவின் நினைவுநாள். அவரை பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்....
அண்ணா... அரை நூற்றாண்டுகளுக்கு மேல், தமிழக ஆட்சி அதிகாரத்தின் மூன்றெழுத்து மூச்சு.காஞ்சிபுரத்தில் துரைசாமியாக பிறந்தபோது இதை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், இந்த வளர்ச்சி அவ்வளவு எளிதாக வந்ததல்ல. புரையோடிக் கிடந்த சமுதாயத்தை சீர்திருத்தும் சிந்தனை இளம் பருவத்திலேயே இருந்ததால், திராவிட இயக்கங்களின் தாய் கட்சியான நீதிக் கட்சியில் சேர்ந்தார், அண்ணா....பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளில் ஈடுபாடு ஏற்பட அவரது தீவிர சீடரானார். சாதி பேதம், மூட நம்பிக்கை, ஏற்ற தாழ்வுகளை கண்டு கோபமுற்ற இளைஞர்களில் முன்னோடியானார். அது போன்ற இளைஞர்கள் அன்பாக அழைத்த பெயர் தான் அண்ணா.உடன் பிறப்பே.. ரத்தத்தின் ரத்தமே.. இவற்றுக்கெல்லாம் அடித்தளம், இந்த அண்ணா என்ற வார்த்தை தான்.தான் விரும்பும் சமூக மாற்றம் வர வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் தேவை என்பதை உணர்ந்து, பெரியாரிடம் இருந்து பிரிந்து அண்ணா கண்ட இயக்கம் தான் திமுக.ஆனால், ஆலமரமாக ஓங்கி நின்ற காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடிப்பது எளிதா என்ன? தளரவில்லை அண்ணா...
தன்னுடைய பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் தனது தம்பிமார்களுக்கும் கற்றுத் தந்து பிரச்சார பீரங்கிகளாக்கினார்.புத்தகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் என தனது கொள்கை பிரச்சாரத்துக்கு வாய்ப்பு கிடைத்த ஒரு தளத்தை கூட அவர் விட்டு வைத்ததில்லை.அவரது எதுகை மோனை பேச்சுக்களும் அடு்க்கு மொழி வசனங்களும் இளைஞர்களைஅவர் பக்கம் இழுத்து வந்தன. நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவரது கன்னிப் பேச்சை ரசித்துக் கேட்டார் அன்றைய பிரதமர் நேரு.பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் ஒன்றாக ஒருவரிடம் இருப்பது மிகவும் அரிது. அப்படி அரிதான மனிதர்களில் ஒருவர் அண்ணா... அதனால் தான் தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர் என அவரை அழைத்தார்கள்.தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனது சொந்த தொகுதியில் தோற்ற போதிலும் தளரவில்லை. பதவியை விட தனது சமுதாய சீர்திருத்த கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்றே நினைத்தார், அண்ணா.குள்ள உருவம், புகையிலை குதப்பும் வாய், முழங்கால் வரை புரளும் துண்டு, முழுக்கை சட்டை என வித்தியாசமான தோற்றம் கொண்ட அண்ணா, 1967ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றி, தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது.அன்று அவர் துவக்கி வைத்த திராவிட ஆட்சி தான், தேசிய கட்சிகளுக்கு இடம் அளிக்காமல் அரை நூற்றாண்டுகளை கடந்தும் தமிழகத்தில் கோலோச்சுகிறது.சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தவர் அண்ணா தான். பேரவையில் அதற்கான தீர்மானம் நிறைவேறியபோது சபாநாயகராக இருந்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். முதல்வர் பதவியில் இரண்டு ஆண்டுகளே இருந்தாலும் மக்கள் மனதில் நிரந்தர சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் அண்ணா.அதனால்தான் அவர் இறந்த போது ஒட்டு மொத்த தமிழகமே சென்னைக்கு திரண்டு வந்து கண்ணீர் வடித்தது.