பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து யூ டியூப் சேனல் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அது குறித்த முழுமையான செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
காட்சி ஊடகம் என்பது என்றைக்கு செல்போனுக்குள் சுருங்கி விட்டதோ... அன்றைக்கே விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டது யூடியூப்.முன்பெல்லாம் யாரைக் கேட்டாலும் யூ டியூப் பார்ப்பதாகச் சொல்வார்கள். இப்போது யாரைக்கேட்டாலும் யூ டியூப் சேனல் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். யூ டியூபில் வீடியோக்களை பதிவிடுவதே தனியொரு தொழிலாகிவிட்டது. அப்படி யூ டியூபே தொழிலாகக் கொண்டவர்கள், யூ டியூபர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் வீடியோக்களை எத்தனை பேர் பார்க்கிறார்களோ அந்த அளவுக்கு வருமானத்தையும் இவர்களுக்கு வழங்குகிறது யூ டியூப் தளம். இதனால்தான் மக்களை பார்க்க வைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கலாசாரம் வளர்ந்துவிட்டது யூ டியூபில்.சித்ரா தற்கொலைக்கு இதுதான் காரணம் என வாய்க்கு வந்ததை அடித்து விடுவது... கொரோனாவெல்லாம் சும்மா என உலக சுகாதார அமைப்புக்கே சவால் விடுவது... இப்படி பார்வையாளர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் யூ டியூப் சேனல்கள் ஆபாசத்தையும் கையில் எடுக்கத் தவறுவதில்லை.
அப்படிப்பட்ட சேனல்களில் ஒன்றுதான் சென்னை டாக்ஸ்.
சாலை நடுவே பொதுமக்களை... அதுவும் குறிப்பாக பெண்களை வழி மறித்து ஆபாசமான தலைப்புகளில் கருத்துச் சொல்லச் சொல்வதுதான் இந்த யூ டியூப் சேனலின் வழக்கம்.முதல் முறை பாலுறவு எப்படி இருக்கும்... கல்யாணத்துக்கு முன்னாடியே உல்லாசமாக இருக்கலாமா என இவர்களின் வீடியோ குவியலில் இருப்பவை எல்லாமே ஒரு டைப்பான கருப்பொருள்தான். இதிலும் தைரியமாக வெளிப்படையாக கருத்து சொல்லும் பெண்களை தேடிப் பிடிப்பதுதான் இவர்களின் சவால். இவர்களின் இந்த ஆபாசக் கொட்டத்தை இணையத்தில் பார்த்து ரசிப்பவர்கள் லட்சக்கணக்கானவர்கள் என்றால் இதையெல்லாம் பார்த்து முகம் சுளிப்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அதில் ஒருவர்தான் பெசன்ட் நகரைச் சேர்ந்த லட்சுமி. அவர் கோபத்துக்கு காரணமாக அமைந்த வீடியோ இதுதான்.இந்த வீடியோவால் கொதித்து எழுந்த அந்தப் பெண், பொது வெளியில் இளம் பெண்களிடம் ஆபாசமாகப் பேட்டி எடுப்பதாக இந்த சேனல் மீது சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் இந்த சேனலின் தொகுப்பாளரான அசன் பாட்ஷா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு, சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே இந்த தொகுப்பாளர் ஏடாகூடமாக கேள்வி கேட்டு பொதுமக்களால் தாக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே யூ டியூப் சேனலில் கந்தர் சஷ்டி கவசம் குறித்து இடம்பெற்ற ஆட்சேபகரமான கருத்துக்கள் தமிழக அரசியலை ஒரு கலக்கு கலக்கியது. அதுவும் கைது நடவடிக்கை வரை போனது. தற்போது இன்னொரு யூ டியூப் சேனலுக்கு விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது. சினிமா போல, தொலைக்காட்சி போல இனி இணைய வீடியோக்களுக்கும் தணிக்கை தேவை என்பதையே இந்த தொடர் சம்பவங்கள் உணர்த்துகின்றன.