அறிவுசார் திறமையை மூலதனமாக்கி இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார், எலான் மஸ்க். யார் இவர்...? என்பதை விரிவாக பார்க்கலாம்...
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிடோரியாவில் 1971-ல் தென் ஆப்பிரிக்க தந்தைக்கும், கனடா தாயிக்கும் முதல் மகனாக பிறந்தவர் எலான் மஸ்க்....
சிறு வயதிலேயே அறிவாற்றல், நினைவாற்றல் கொண்டு வெற்றியை வசமாக்குவதில் வல்லமை கொண்டிருந்தார், எலான்...தொடக்க காலக்கட்டங்களில் கணினி மொழியானது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை..அதனை 10 வயதில் சுயமாக கற்ற மஸ்க், 12 வயதில் Blaster என்ற ஒரு வீடியோ கேமை உருவாக்கி தொழில்நுட்ப இதழ் ஒன்றுக்கு 500 டாலருக்கு விற்பனை செய்தவர்8 வயதிலேயே தாய் விவகாரத்து வாங்கி சென்றுவிட, குடிக்கு அடிமையான தந்தையுடன் இருந்த எலானுக்கு புத்தகங்கள் மட்டும்தான் நெருங்கிய நட்பாக இருந்தது.அப்போது அவருடைய அறிவை அலங்கரித்தது எல்லாம் ஐசக் அசிமோவின் புத்தகங்கள்... புத்தகங்கள் அவருடைய இதயத்தில் விண்வெளியை நோக்கிய பயணத்தை துளிர்விடச் செய்துவிட்டன.17 வது வயதில் கனடாவுக்கு சென்று பொருளாதாரம் மற்றும் இயற்பியலிலும் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆராய்ச்சி படிப்பை தொடங்கிய இருநாட்களிலே அதனை கைவிட்டு சுய தொழிலில் கால் பதித்தார், எலான் மஸ்க்.தன்னுடைய அறிவுசார் திறமையை முழு மூலதனமாக்கி செய்தி பத்திரிக்கைகளுக்கு உதவும் சாப்ட்வேர்களை உருவாக்கும் 'ஸிப்2'என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தை
1999-ல், 350 மில்லியன் டாலருக்கு காம்பாக் நிறுவனம் வாங்கிக்கொண்டது.
பின்னர் எக்ஸ்.காம் என்ற ஆன்லைன் கட்டண நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் PayPal நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. இந்நிறுவனம் நன்றாக சென்ற போதே 2002-ல் பிற பங்குதாரர்கள் நிர்பந்தம் காரணமாக ebayயிடம் விற்பனை செய்யப்பட்டது. இதில் மஸ்கிற்கு கிடைத்தது 180 மில்லியன் டாலர்கள்.உழைப்பால் கிடைத்த இத்தொகையை கொண்டு விண்வெளி கனவை எட்ட அஸ்திவாரமிட்டார் மஸ்க்.... 100 மில்லியன் டாலரை கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும், 70 மில்லியன் டாலரை கொண்டு மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தையும், 10 மில்லியன் டாலரை கொண்ட சோலார் சிட்டி நிறுவனத்தையும் தொடங்கினார். இதர செலவுகளுக்கு எல்லாம் கடனையே பெற்றார்.. "ஒன்று முக்கியம் என்றால், தோல்விக்கே அதிகமான வாய்ப்பு என்றாலும் அதனை செய்ய வேண்டும் என்பது தான் எலான் மஸ்கின் தாரக மந்திரம்...."இது அவருடைய கநவு திட்டமான செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் நோக்கில் தொடங்கப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் பொருந்தும் இந்நிறுவனம் தயாரித்து 2006 முதல் 2008 வரையில் முதலில் விண்ணுக்கு அனுப்ப முயன்ற 3 ராக்கெட்களும் வெடித்து சிதறின... எல்லோரும் ஏளனம் செய்த போதும் நம்பிக்கையை விடவில்லை... கடினமான உழைப்பு, விடா முயற்சியை அவர் தொடர்ந்தார்.2003-ல் நாசா அனுப்பிய கொலம்பியா விண்கலம் வெடித்து கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து விண்வெளி பயணத்தில் சுணக்கம் காட்டியது அமெரிக்காஅப்போது விண்வெளிக்கு வீரர்களையும், சரக்குகளையும் அனுப்பி வைக்க தனியார் நிறுவனங்களின் உதவியை நாடியது அமெரிக்கா... இதைவிட்டால் தமக்கு வாய்ப்பு கிடையாது என்பதை உணர்ந்துக்கொண்ட மஸ்க் அதனை பிடித்துக்கொண்டார்... ஒபாமா நிர்வாகத்தில் அதற்கு பலனும் கிட்டியது. பின்னர் சரக்குகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லுதல், விண்ணுக்கு அனுப்பும் ராக்கெட்களை பூமிக்கு மீண்டும் கொண்டுவருதல் உள்ளிட்ட திட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி கனியை பறித்தது.ஸ்பேஸ் எஸ்க். கடந்த 2020-ல் வெற்றிக்கரமாக விண்வெளி வீரர்களையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் சென்றது. ஒரு பெரிய இலக்கை அடைய தொடங்கப்பட்ட அவருடைய மூன்று நிறுவனங்களுமே வருங்காலத்திற்கு ஏற்ப திட்டமிடப்பட்டவை...இதில் மின்சார கார் தயாரிப்பதில் மட்டுமல்ல நவீனத்தை புகுத்துவதிலும் அசத்துகிறது டெஸ்லா நிறுவனம்... ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கிலோ மீட்டரையும் தாண்டி சிட்டாக பறக்கும் வகையிலான வடிவமைப்பு உலக அரங்கில் நிறுவனத்தை மேல் தூக்கி நிறுத்தியிருக்கிறது. டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை கடந்த ஆண்டில் எட்டு மடங்கு அதிகரித்த நிலையில், இப்போது எலானை உலக பணக்காரராக்கி இருக்கிறது. ப்ளூம்பெர்க் ஊடகம் வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 195 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்... அவருடைய சாதனையை பலரும் வியந்த போது... 'என்ன ஆச்சர்யம்' என டுவிட்டரில் கூறிய மஸ்க் "வாங்க வேலையைப் பார்ப்போம்" என எளிதாக கூறிவிட்டு பணியை தொடர்ந்தார்.