இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் - பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து
பதிவு : செப்டம்பர் 17, 2020, 09:46 AM
பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைத்தொடர்ந்து அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போல் தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெறும் பிரதமர், தொடர்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்,.  பிரதமர் மோடியின் பிறந்த நாள் , கடந்த 14 ஆம் தேதி முதல் சேவை வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது,.  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,   பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் 130 கோடி இந்திய குடிமக்களுடன் தானும் இணைந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு பின்லாந்து பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்,.   பின்லாந்து பிரதமர் சன்னா மரின் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிதாக 4,473 பேருக்கு கொரோனா தொற்று 

தலைநகர் டெல்லியில் புதிதாக 4 ஆயிரத்து 473 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 269 ஆக உயர்ந்து இருக்கிறது. இதுவரை 1 லட்சத்து 94 ஆயிரத்து 516 குணமடைந்து உள்ளனர். இன்று கொரோனாவுக்கு 33 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 839 ஆக உயர்ந்து உள்ளது. சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ராணுவத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை - 16,758

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை முறையே 16 ஆயிரத்து 758, ஆயிரத்து 365 மற்றும் ஆயிரத்து 716 ஆக உள்ளதாக, மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். மேலும், இராணுவம் மற்றும் விமானப்படையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 32 மற்றும் 3 மற்றும் கடற்படையில் யாருமில்லை என்றும் அவர் குறிபிட்டார். 

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கீழ் கொண்டு வரும் சட்ட மசோதா 
- மக்களவையில் தாக்கல் 

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.  

மசோதாவை தாக்கல் செய்த பிறகு, மக்களவையில் பேசிய அவர், சில வங்கிகளில் ஏற்பட்ட துரதிர்ஷ்ட வசமான சூழல் காரணமாக பணத்தை டெபாசிட் செய்தவர்கள், கடும் இன்னலுக்கு ஆளானதாக கூறினார். அதனை கருத்தில் கொண்டே பணத்தை முதலீடு செய்தவர்களை பாதுகாக்கவே, இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாரான் குறிப்பிட்டார். மாநிலத்தின் கூட்டுறவு அமைப்புகளின் மீது இந்த சட்டம் ஒரு போதும் கை வைக்காது என்றும், நாட்டில் உள்ள 105 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் குறைந்த பட்ச முதலீட்டு தொகை கூட இல்லாமல் இயங்குவதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பின்னர் இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

வங்கி முறைப்படுத்தும் மசோதா - திமுக எதிர்ப்பு

வங்கிகளை முறைப்படுத்தும் மசோதாவை கடுமையாக எதிர்ப்பதாக, திமுக எம்.பி. செந்தில்குமார் மக்களவையில் கூறியுள்ளார். இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள மொத்த கூட்டு வங்கிகளில் 128 வங்கிகள் வெற்றிகரமாக லாபத்துடன் இயங்கி வருவதாக கூறியுள்ளார். வெறும் 9 கூட்டுறவு வங்கிகள் மட்டுமே மோசமான நிலையில் உள்ளன என்றும், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது மாநில அரசுகளின் அதிகாரத்தில் கை வைப்பது போல் உள்ளதாக அவர் தெரிவித்தார். கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தவும் இணைக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும், ரிசர்வ் வங்கி ஏற்கனவே கடுமையான பணி சுமையில் சிக்கித் தவிக்கிறது என்றும் திமுக எம்.பி. செந்தில்குமார் கூறினார். 

"தாதன்குளம் ரயில் நிலையத்தை மூடும் திட்டம் இல்லை"

தூத்துக்குடி - தாதன்குளம் ரயில் நிலையத்தை மூடும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில், திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல், தாதன்குளம் ரயில் நிலையத்தை மூடும் திட்டம் தற்போது இல்லை எனக்கூறினார். 

ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரம் - திமுக எம்.பி. கனிமொழி கேள்வி

தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலங்களை, கையகப்படுத்தி, தமிழக அரசு இன்னும் 6 மாதங்களில் மத்திய அரசிடம் சமர்பிக்கும் என, எதிர்ப்பார்ப்பதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். மாதவன்குறிச்சி பள்ளக்குறிச்சி, படுக்காப்பத்து உள்ளிட்ட இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு கூறினார். பொதுவாக நிலத்தை கையகப்படுத்திய பிறகு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கட்டமைப்பு துவங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

2 ஜி தகவல் தொடர்பை கைவிடும் திட்டம் இல்லை - மத்திய இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே 

2 ஜி தொலைபேசி தகவல் தொடர்பை கைவிடும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். திமுக உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்தும் அத்தகைய எந்தவிதமான பரிந்துரையும் மத்திய அரசுக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தகவல் தொடர்பு சேவைக்கு எத்தகைய தொழில் நுட்ப வசதியை வழங்குவது என்பது மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள் உடைய விருப்பம் என அவர் கூறியுள்ளார். இருக்கும் அலைக்கற்றைகளை வெவ்வேறு அலைவரிசைகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலத்தின் மூலம் வழங்கும் பணியைதான் மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்புத் துறை செய்துள்ளதாக, மத்திய இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மக்களையில் பேசிய அவர் 
ரயில்வே விரிவாக்கம், நவீனமயம் உள்ளிட்ட பணிகளுக்கு 50 லட்சம் கோடி ரூபாய் நிதி முதலீடு தேவைப்படுவதாக கூறினார், மேற்கண்ட பணிகளுக்கான நிதியில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரி செய்யவும் பயணிகளுக்கு தரமான ரயில் மற்றும் சரக்கு சேவைகளை வழங்கவும் நவீன தொழில்நுட்பத்தை மேற்கொள்ளவும் ஒரு சில திட்டங்களில் தனியார் துறை பங்களிப்பை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.