கமலின் புதிய பட அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி... தொண்டர்கள்..?
பதிவு : செப்டம்பர் 17, 2020, 09:35 AM
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், கமலின் புதிய பட அறிவிப்பு திரையுலகிலும், அரசியல் உலகிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
'மாநகரம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கவனம் பெற்றார்.

இதைத்தொடர்ந்து, நடிகர் விஜயை இயக்கும் வாய்ப்பையும் அந்த திரைப்படம் பெற்றுத்தந்தது. விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' திரைப்படத்தையும் இயக்கினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கொரோனா ஊரடங்கால் பட வெளியீட்டுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கே முடியாததால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.

இதனிடையே, தற்போது, கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம், டாப் ஹீரோக்களை இயக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உருவெடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "ஆண்டவருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டு அந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். கமலின் 232 படமாக தயாராகும் இந்த திரைப்படத்திற்கு "எவனென்று நினைத்தாய் என பெயரிடப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தின் பாடல் தொடங்கும் வரியில் இருந்து இந்த டைட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃப்லிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த போஸ்டரை பார்க்கும்போது, துப்பாக்கிகள் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவப்பு நிற பின்னணியில், துப்பாக்கிகளால் ஆன கமல் ஹாசனின் உருவம் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் "முன்னொரு காலத்தில், அங்கு ஒரு பேய் உயிர் வாழ்ந்து வந்தது என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசனம் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

இது மட்டுமின்றி, அடுத்த ஆண்டு அதாவது
சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறை படமாக இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.

இந்தியன்-2 படம்தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்த கமல் தனது முடிவை மாற்றிக்கொண்டது ஏன்?

ஏற்கெனவே, சினிமாவையும், பிரபல சின்னத்திரை நிகழ்ச்சியையும் விட்டுவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடாததால் பார்ட் டைம் அரசியல்வாதி என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், கமலின் புதிய பட அறிவிப்பு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் இந்தப் புதிய பட அறிவிப்பு, அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மக்கள் நீதி மய்யம் தொண்டர்களிடையே சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், 2021 மே மாதம் ரிலீசாக வேண்டிய படத்தில் நடிக்கும் கமல், தேர்தலில் எப்படி முழுமையாக கவனம் செலுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.