மோடி சொன்ன பணத்தை தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயற்சி
பதிவு : செப்டம்பர் 15, 2020, 07:42 PM
பிரதமர் சொன்ன 15 லட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்ற நபரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் உவைஸ். ஆட்டோ ஓட்டுநரான இவர், பத்மநாபபுரம் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர். இவரது செல்போனுக்கு சில தினங்களுக்கு முன்பாக அழைப்பு ஒன்று வந்துள்ளது. 

எதிர்முனையில் பேசிய நபர், தன்னை ஒரு வங்கி அதிகாரி போல காட்டிக் கொண்டுள்ளார். உவைஸிடம் பேசிய அவர், பிரதமர் ஏற்கனவே அறிவித்த 15 லட்ச ரூபாய் பணத்தை மக்களுக்கு விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கியுள்ளதாக கூறியிருக்கிறார். 

இதில் முதல் கட்டமாக 25 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளதாகவும் கூறிய அவர், இதற்காக தங்கள் வங்கிக் கணக்கை தாருங்கள் என விடாமல் அடம் பிடித்துள்ளார் அந்த நபர்... 

ஆனால் வந்த போன் மோசடி செய்பவருடையது என்பதை முதல் வார்த்தையிலேயே தெரிந்து கொண்ட உவைஸ், மோசடி நபரின் பாணியிலேயே கிண்டலாக பதில் கொடுத்துள்ளார்...

பள்ளிவிளை மையவாடி என்ற வங்கி ஒன்று உள்ளது என்றும், அதில் தான் தனக்கு கணக்கு உள்ளது என்றும் உவைஸூம் தன் பாணியில் அந்த நபரை திணற வைத்துள்ளார்... 

என்ன சொன்னால் எனக்கென்ன? எனக்கு தேவை வங்கிக் கணக்கு தான் என்பதில் குறியாக இருந்த அந்த மோசடி நபர், உவைஸ் மனைவியின் வங்கிக் கணக்கையும் கேட்க, அவர் அளித்த பதில் அல்டிமேட்... 

எப்படியும் பணத்தை ஆட்டையை போடலாம் என நினைத்து பேசிக் கொண்டிருந்த கில்லாடி ஆசாமிக்கு எந்த வித பதிலும் கிடைக்காமல் போகவே ஒரு கட்டத்தில் இணைப்பை துண்டித்துள்ளார்... இவர்களின் இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இதேபோல் மோசடி பேர்வழி பெண் ஒருவரிடமும் கைவரிசை காட்ட முயற்சிக்கவே, அவரோ சுதாரித்துக் கொண்டு கேட்கவே முடியாத வார்த்தைகளால் வறுத்தெடுத்து இருக்கிறார்... 

கொரோனா காலத்தில் விதவிதமான மோசடிகள் உலா வரும் வேளையில் பிரதமர் அறிவித்த திட்டத்தை கூறி மோசடி செய்ய முயன்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... 

உவைஸை போல எல்லாரும் உஷாராக இருந்தால் மட்டுமே இந்த மோசடி பேர்வழிகளிடம் இருந்து தப்பிக்க முடியும்....

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.