தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமில் நட்பை மறக்காமல் கொஞ்சித் திரியும் யானைகள்
பதிவு : டிசம்பர் 15, 2018, 03:47 PM
தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் இசைக்கருவிகள் வாசிப்பது, ஷவரில் குளித்து குதூகலிப்பது என உற்சாகமாக வளைய வருகின்றன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடங்கியுள்ளது. 11வது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 28 யானைகள் கலந்து கொண்டுள்ளன. ஆண்டிற்கு ஒருமுறை சந்திப்பதால் இந்த யானைகள் தங்கள் நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் ஒன்றையொன்று ஆரத்தழுவிக் கொண்ட காட்சி பார்ப்போரை கவர்ந்தது. 

இந்த முகாமில் கலந்து கொண்டுள்ள யானைகள் ஒவ்வொன்றும் செய்யும் குறும்புகளை காண கண்கள் போதாது. ஸ்ரீ பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் யானை கோதை இசைக் கருவிகள் வாசிப்பதில் கில்லாடி. தன் துதிக்கையால் மவுத் ஆர்கானை நேர்த்தியாக வாசிப்பதை மற்ற யானைகள் கூட ரசித்துக் கேட்கும் அளவுக்கு கொள்ளை அழகு. மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவிலின் யானை செங்கமலம் கூடுதல் அழகுடன் முகாமில் வளைய வருகிறது. காரணம் மற்ற யானைகளிடம் இல்லாத அளவுக்கு நீண்ட கூந்தல் இருப்பதால் சற்று வித்தியாசமாகவே காட்சி தருகிறாள் செங்கமலம். நீண்ட கூந்தலுக்கு வண்ணம் தீட்டிய நிலையில் செங்கமலம் அசைந்தாடி வரும் காட்சி பேரழகு.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலின் யானை லட்சுமி கால்களில் கொலுசு அணிந்து கொண்டு முகாமில் வளைய வருகிறாள். அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் திருக்கோவிலை சேர்ந்த ஜெயமால்யதா என்ற யானை நின்று கொண்டே உற்சாகமாக ஆடும் காட்சிகள் பார்ப்போரை பரவசப்படுத்துகிறது. 

தண்ணீரில் உற்சாகமாக குளியல் போடுவதும், சத்தான உணவுகளை சாப்பிடுவதும் என யானைகள் தங்கள் மனம் விரும்பியபடி இருப்பதே அவைகளுக்கு நிறைவான ஒரு விஷயம் தான். உற்சாகம், ஓய்வு என எல்லாம் கலந்த கலவையாக யானைகள் முகாமுக்குள் வலம் வருவது பார்ப்போரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.