பட்டாசுகளின் பரிணாம வளர்ச்சி எப்படி?
பதிவு : நவம்பர் 04, 2018, 12:36 PM
தீபாவளி என்றாலே பட்டாசு தான். இந்த பட்டாசுகளின் பயணம்
* பட்டாசுக்கு, 2 ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. இன்று, உலகமெங்கும் பட்டாசு பயன்படுத்தப்படுகிறது. பட்டாசைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். சீனத்திற்கு வந்த பல்வேறு பயணிகளின் வழியாக, உலகமெங்கும் பரவியது பட்டாசு.

* பட்டாசு கண்டுபிடிக்கப்பட்டது, ஒரு தற்செயல் நிகழ்வு தான். அறிவியல் பயன்பாட்டுக்கு முந்திய பழங்காலத்திலேயே, சீனர்கள் பட்டாசைக் கண்டுபிடித்து, வெடிக்கச் செய்துள்ளனர். 

* உலகிலுள்ள எல்லாரையும் போலவே சீனர்கள், தங்கள் சமையலுக்கு உப்பைப் பயன்படுத்தத் தொடங்கினர். பல்வேறு உப்பு நீரைக் காய்ச்சியும், உப்புச் சுவையுள்ள பாறைப் படிவுகளைச் சுரண்டி எடுத்தும், தங்களுக்குரிய உப்பைப் பெற்றனர். 

* சீனர்கள் காய்ச்சிய உப்புக் கற்களில் பொட்டாசியம் நைட்ரேட் கலவை மிகுந்திருந்தது. அது தீயில் பட்டதும் பொறிகளை எழுப்பி, எரிந்து அணையக் கூடிய தன்மையைக் கொண்டது. 

* பொட்டாசியம் நைட்ரேட் கலந்த உப்பைச் சமையலுக்குப் பயன்படுத்தியபோது, அந்த உப்புக்கற்கள் தவறி நெருப்புக்குள் விழுந்தன. நெருப்பில் விழுந்த உப்புக் கற்கள் மத்தாப்புகளைப் போல், பொறித் துகள்களை உதிர்த்தபடி, எரிந்து அடங்கியது. 

* இதுதான் பட்டாசுக்கான மூலப்பொருளைச் சீனர்கள் கண்டறியக் காரணமான முதல் வினை. ஒளியைத் தோற்றுவிப்பதற்காகத் தான் இது முதலில் பயன்படுத்தப்பட்டது.

* அந்த உப்பைக்கொண்டு, பல்வேறு ஒளிரும் செயல்களை சீனர்கள், நிகழ்த்தினர். அந்த ஒளி, தகதகப்பாகவும் கண்ணைப் பறிக்கும் படியாகவும் இருந்தது.  

* பிறகு, மூங்கில் குருத்துக்குள், அந்த வெடி உப்பை நிரப்பி, பற்ற வைத்தனர். அது, காதைப் பிளக்கும் சத்தத்தை எழுப்பியபடி வெடித்தது. பின்னர், கரியும் கந்தகத் தூளும் கலந்த கலவை, இவ்வாறு வெடிக்கும் தன்மையுடையதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

* இறுக்கமான மூங்கில் குருத்துக்குள், வெடி பொருளை நிரப்பி தீப்பற்ற வைத்தனர். அந்த வெடிமருந்து தீயினால், திடீரென்று விரிவடைவதால், தம்மைச் சூழ்ந்திருக்கும் மூங்கில் தடுப்பை தகர்த்தது.  அந்தத் தகர்ப்பொலி தான், வெடியோசையாக கேட்கிறது. 

* மூங்கில் குருத்துக்குள் கீழ்ப்பகுதியை அடைக்காமல் விட்டு, ஒரு வால்குச்சியைக் கட்டினால், அந்த வெடிமருந்து திறந்திருக்கும் பகுதியில் விரைந்து வெளியேறுகிறது. அதனால் பெறப்படும் உந்து விசையைக்கொண்டு எந்தத் திக்கிலும் ஏவலாம். அந்த முறையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டது தான் வாணவேடிக்கை. 

* இதன் மேல் நுனியில் வெடிமருந்துக் கலவையை அடர்த்தியாய் அடைப்பதன் மூலம், வெடிக்கவும் வைக்கலாம். அம்முறைப்படிதான் வானில் ஏவப்படும் வாணங்கள், வெடித்துச் சிதறுகின்றன.

* சீனர்கள் பட்டாசுப் பயன்பாட்டை அறிந்தவுடன், தீயசக்திகளை விரட்டுவதாக கருதினர். சீனத்து பௌத்தத் துறவியொருவர், பட்டாசு சத்தத்தால் தீயவை அகல்கின்றன என்று கூறினார். அவர் கூறியவாறு, சீன அரசர்கள் பங்கேற்கும் எல்லா விழாக்களிலும் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன. 

* ஏழாம் நூற்றாண்டிலேயே பட்டாசு தயாரிக்கும் நுட்பங்களைப் பற்றி எழுதப்பட்ட சீனக்குறிப்புகள் உள்ளன. பட்டாசைக் குறிப்பிடும் 'பயர் ஒர்க்' என்பது, ஜப்பானில் இருந்து வந்த சொல். இதற்கு, நெருப்பு மலர் என்று அர்த்தம்... 

இந்தியாவிற்கு எப்போது வந்தது...?

* 1922ம் ஆண்டுகளில், கொல்கத்தாவில், ஜப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இந்தியாவிலேயே கொல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது. 

* அப்போது சிவகாசியிலிருந்து, தீப்பெட்டி தொழிலை கற்றுக் கொண்டு வந்துள்ளனர்.... சிவகாசியில், 1928இல் தீப்பெட்டி தொழிற்சாலை உருவானது. அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. 

* இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு, சிவகாசியில் நடைபெறுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.