தங்க நகைகள் திருடு போனதாக கூறி நாடகம் - மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தினர்

தங்க நகைகள் திருடு போனதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 7 பேரை கர்நாடக மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
x
கர்நாடக மாநில எல்லையிலுள்ள சர்ஜாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி பிரகாஷ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சர்ஜாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வீட்டில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ தங்க நகைகள் திருடு போனதாக தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சர்ஜாபுரம் போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த புகார் தொடர்பாக போலீசாருக்கு ஒருவித துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே ரவி பிரகாஷ் குடும்பத்தினரை நேரில் அழைத்த போலீசார், திருட்டு நடந்தது எப்படி, என அவர்களிடம் கேட்டனர். அப்போது அவர்கள் அளித்த முன்னுக்கு பின் முரணான பதில்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்கள் தங்கள் பாணியில் விசாரணையை துவக்கினர். அப்போது தான் ரவி பிரகாஷ் குடும்பத்தினர் செய்த தில்லாலங்கடி வேலை வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. தங்களுக்கு சொந்தமான நகைகளை அவர்கள் அடமானம் வைத்து விட்டு காணாமல் போனதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர். தங்களின் தங்க நகைகளை தீபக் மூலம் அங்குள்ள அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். பின்னர் தங்களது வீட்டில் ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகள் திருடு போனதாக சர்ஜாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதையடுத்து ரவி பிரகாஷ், அவரின் மனைவி ஆஷா, மகன் மிதுன் குமார், ஆஷாவின் தங்கை சங்கீதா, சங்கீதாவின் கணவர் சரண், மிதுன் குமாரின் நண்பர் தீபக், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜமீலா ஆகிய 7 பேரும், இந்த மோசடி சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் திருட்டு நகைகள் குறித்து விசாரணை நடத்தி ஏதாவது ஒரு வழக்கில் கொள்ளையர்களிடம் இருந்து  தங்க நகைகளை மீட்டால், அந்த நகைகளை தங்களுக்கு வழங்குவார்கள் என நினைத்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இதில் முக்கிய தடயமாக தங்க நகைகளை தீபக் என்பவர் சர்ஜாபுரம் பகுதியில் உள்ள ஒரு அடகு கடையில் அடமானம் வைப்பதற்காக ஒரு பையில் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளன. இதே பாணியில் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்று புகார்கள் அளித்து காவல் நிலையங்களில் இருந்து தங்க நகைகளை இவர்கள் வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்