இந்தியாவில் கொரோனா 3-வது அலையில் தடுப்பூசி செலுத்தாதோருக்கு ஆக்சிஜன் அவசியமாகிறது என்ற அதிர்ச்சி தகவலை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியாவில் ஒமிக்ரான் வைரசுடன் வேகம் எடுத்துள்ள கொரோனா 3-வது அலையில், தினசரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கொரோனா 3-வது அலை முந்தைய அலைகளை போன்று தீவிரமாக இருக்காது என்ற அலட்சியம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.இந்த நிலையில் ஏற்கனவே மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாலே 3-வது அலை வீரியமாக தெரியவில்லை எனக் கூறும் மருத்துவர்கள், தடுப்பூசி செலுத்தாதோருக்கு தொற்று ஏற்படும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் நேரிடுவதாகவும் எச்சரிக்கிறார்கள். இந்தியாவில் அதிக பாதிப்பை கொண்ட மும்பையில், தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் 96% பேர் தடுப்பூசி செலுத்தாதோர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பஞ்சாப்பில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை 264 % உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் தடுப்பூசி போடப்படாதவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 30 மடங்கு அதிகமாக உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே ஒமிக்ரான் லேசானது என நிராகரிக்கக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமே உயிர்காக்கும் மருந்தாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசியை செலுத்தியவர்களாக இருப்பதால் உயிரிழப்பு இல்லையென கூறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், 2 டோஸ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.