இளமையில் தோல்வி, முதுமையில் வெற்றி... காதலியை தேடி சென்ற பவர் பாண்டி...

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
x
இளமைக்காலம் முதல் காதல் முதுமையிலும் எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதை பிரதிபலித்திருக்கும் 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி திரைப்படம்... படத்தில் ராஜ்கிரண் தன்னுடைய இளமை கால காதலியை தேடிச் சென்று சந்திப்பார். இதுபோன்றதொரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியிருக்கிறது. 

மாண்டியா மாவட்டம் மேலக்கோட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் சிக்கண்ணா... தன்னுடைய சிறு வயதில் ஜெயம்மா என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு எழவும் ஜெயம்மா வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துள்ளார். ஆனால் அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. குழந்தையில்லாததால் அவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டார். 

இதற்கிடையே ஜெயம்மா நினைவில் வாழ்ந்துவந்த சிக்கண்ணாவும் ஊரைவிட்டு வெளியேறியிருக்கிறார். சுமார் 35 ஆண்டுகள் கழித்து தன்னுடைய காதலியின் நிலை சிக்கண்ணாவுக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து ஜெயம்மாவை தேடிச் சென்றிருக்கிறார். இருவருக்கும் இடையிலான பரஸ்பர அன்பு அப்படியே தொடர்ந்திருக்கிறது. பவர் பாண்டி படத்திலும் ராஜ்கிரணும், ரேவதியும் பரஸ்பர அன்பை வெளிக்காட்டியிருப்பார்கள். இறுதியில் இயல்பு மீறாமல் பக்குவமான முறையிலும் முடிக்கப்பட்டு இருக்கும். ஆனால், பெங்களூருவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் மேலக்கோட்டை கோயிலில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

முதுமையிலும் அன்பு மாறாமல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க இருவரும் திருமணம் செய்துகொண்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்