கேரளாவை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...

கேரளாவில் பெய்யும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களை மழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது.
கேரளாவை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...
x
அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் மழை வெளுத்து வாங்குகிறது.

பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கனமழை கொட்டித்தீர்த்தது. 

தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலைகளிலிருந்து சேரும்... சகதியுமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் பாலங்கள் மூழ்கின. பல இடங்களில் வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகள் திறக்கப்பட்டன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை திறக்கப்பட்ட நிலையில், கல்பாத்தி பாரதப்புழா ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல், மலங்கரா, நெய்யார், அருவிக்கரா உள்ளிட்ட அணைகளும் திறக்கப்பட்டன.

கேரள மாநிலத்தில் குறிப்பாக கோட்டயம் மாவட்டத்தை மழை, வெள்ளம் புரட்டிப்போட்டது. குடியிருப்புகள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. குட்டிக்கல் பகுதியில் வீடுகளையும், கடைகளையும் வெள்ளம் அடித்துச் சென்றது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 13 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பூஞ்ஞாறு பகுதியில் வெள்ள நீருக்கு மத்தியில் சிக்கிய பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் சீறிபாய்ந்தது. 

இடுக்கி மாவட்டத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் கரைகளில் வசிப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடுபுழா கான்யாறு பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இடுக்கியில் வரும் 23 ஆம் தேதி வரை, இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொக்காயர் பகுதியில் 4 வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு 8 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால் கேரள அரசு, அதிகாரிகளுடன் ஆலோசித்து மீட்பு மற்றும் நிவாரண  நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. விமானப்படையும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. அரக்கோணத்திலிருந்து 100 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையின் 5 குழுக்கள் கேரளாவுக்கு விரைந்துள்ளன.  


Next Story

மேலும் செய்திகள்