வெங்கையா நாயுடு பயணத்திற்கு எதிர்ப்பு - சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அருணாச்சல பிரதேசம் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது.
வெங்கையா நாயுடு பயணத்திற்கு எதிர்ப்பு - சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்
x
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடிவரும் சீனா, அம்மாநிலத்தை தெற்கு திபெத் எனக் கூறிவருகிறது.

அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய தலைவர்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.  

சமீபத்தில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அருணாச்சல பிரதேசம் சென்று, அம்மாநில சட்டசபையில் உரையாற்றினார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன ஊடகத்திற்கு பேட்டியளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லிஜியன், 

அருணாச்சல பிரதேசத்தை இந்தியப் பகுதியென சீனா அங்கீகரிக்கவில்லை என்றும்

இந்திய தலைவர்கள் அங்கு செல்வதை கடுமையாக எதிர்க்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

அவருடைய இத்தகைய பேச்சுக்கு இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி பதிலடியை கொடுத்துள்ளார். 

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும்

இந்திய தலைவர்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வது போல், அருணாச்சல பிரதேசத்திற்கும் சென்று வருவார்கள் என்றும் கூறினார்.

சமீபத்தில் அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி செய்ததை குறிப்பிட்டு பேசிய அரிந்தம் பக்சி, எல்லை நிலையை சீனா தன்னிச்சையாக மாற்ற முயல்வது இருதரப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்றார்.

இருதரப்பு ஒப்பந்தப்படி கிழக்கு லடாக் எல்லையில் நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்கு சீனா பணியாற்ற வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதாகவும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்