கேரளாவை உலுக்கிய உத்ரா மரணம் - பாம்பாட்டியிடம் பேசி ஆதாரங்களை சேகரித்த போலீஸ்

பாம்பை விட்டு மனைவி உத்ராவை கொலை செய்த வழக்கில் கேரள போலீசாரின் தீவிர விசாரணையே இப்போது சூரஜை குற்றவாளி என உறுதி செய்து தண்டனை பெற்றுத்தர வைத்திருக்கிறது.... இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்....
கேரளாவை உலுக்கிய உத்ரா மரணம் - பாம்பாட்டியிடம் பேசி ஆதாரங்களை சேகரித்த போலீஸ்
x
பாம்பை விட்டு மனைவி உத்ராவை கொலை செய்த வழக்கில் கேரள போலீசாரின் தீவிர விசாரணையே இப்போது சூரஜை குற்றவாளி என உறுதி செய்து தண்டனை பெற்றுத்தர வைத்திருக்கிறது.... இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்....2020 ஆம் ஆண்டு மே மாதம் உத்ரா என்ற பெண் பாம்பு கடித்ததில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அப்போது நடந்த விசாரணையில் உத்ராவின் கணவரான சூரஜ் குமார் மீது சந்தேகம் எழவே, போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். 
பாம்பு கடித்து பெண் இறந்தது விபத்தாக இருக்கலாம் என்றாலும் இது திட்டமிட்ட கொடூர கொலை என்பதை உறுதி செய்ய கேரள போலீசார் எடுத்த முயற்சிகள் அத்தனை எளிதானதல்ல. காரணம் கொலையாளியை கண்டறிவதற்கு முன்பாக அவர்கள் பாம்பின் குணாதிசயங்கள் குறித்து தேடித் தேடி தெரிந்து கொண்டனர். உத்ரா மரணமடைவதற்கு முன்பாக அவரை 2 முறை பாம்பு கடித்ததாக சொல்லப்பட்டது. சூரஜ் வீட்டில் உத்ரா இருக்கும் போது அவரை விஷத்தன்மை கொண்ட விரியன் வகை பாம்பு கடித்துள்ளது. அப்போது அவர் வீட்டின் முதல் மாடியில் இருந்துள்ளார். பொதுவாக விரியன் வகை பாம்புகள் விவசாய நிலங்களில் மட்டுமே இருக்கும். அந்த பாம்பு மாடிக்கு  சென்றது எப்படி? என்ற கேள்வியே சந்தேகத்தை ஏற்படுத்தியது. அப்படி என்றால் பாம்பை வேண்டும் என்றே முதல்  மாடியில் விட்டிருக்கலாம் என உறுதியானது.அதேபோல் இரண்டாவதாக உத்ராவை கடித்தது நாகப்பாம்பு. அம்மாவின் வீட்டில் இருந்த உத்ராவை நாகப்பாம்பு கடித்ததாக சொல்லப்படும் நிலையில் நாகப்பாம்பின் குணாதிசயம் குறித்தும் போலீசார் ஆராய்ந்தனர். இதனிடையே சூரஜ் செல்போனின் கூகுள் தேடுதலையும் போலீசார் உற்று நோக்கினர். உத்ராவை முதல் முறை விரியன் பாம்பு கடித்த போது சூரஜ் தன் செல்போனில் விரியன் வகை பாம்புகள் குறித்து தேடி உள்ளார்.2வது முறையாக நாகப்பாம்பு கடித்த போது அதற்கு முன்பாக சூரஜின் செல்போனில் நாகப்பாம்பு குறித்த தேடுதல் இருந்துள்ளது. இதை எல்லாம் ஆதாரமாக வைத்து தான் போலீசார் சூரஜை தொடர்ந்து கண்காணித்தனர். இதுமாதிரியான வழக்குகள் மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் அரங்கேறி குற்றவாளிகளும் தப்பியதாக தெரிகிறது. ஆனால் அதே போன்று சூரஜ் தப்பி விடக் கூடாது என்பதில் கேரள போலீசார் கவனமாக இருந்தனர். வனவிலங்கு ஆர்வலராக இருந்த சூரஜ் தன் வீட்டில் ஏராளமான விலங்குகளை வளர்த்து வந்த நிலையில் பாம்புகளை கையாள்வது குறித்தும் தெரிந்து வைத்துள்ளார். பாம்பாட்டியான சுரேஷிடம் அவர் அடிக்கடி செல்போனில் பேசியதும், பாம்புகளை வீட்டுக்கு கொண்டு வந்து சர்ப்ப பூஜை செய்ததும் விசாரணையின் போது வெட்டவெளிச்சமானது.பொதுவாக பாம்பு கடித்தவர்கள் வலியால் தூங்க முடியாது ஆனால் பாம்பு கடித்த பிறகு உத்ரா நீண்ட நேரம் தூங்கியதாக சூரஜ் போலீசில் கூறியுள்ளார். அப்போது தான் மயக்க மருந்து கொடுத்து உத்ரா மீது பாம்பை ஏவி சூரஜ் கொடூரமாக கொன்றதை போலீசார் தெரிந்து கொண்டனர்.இப்படியாக கேரள போலீசாருக்கு  பெரும் சவாலை ஏற்படுத்திய இந்த வழக்கு இப்போது குற்றவாளி சூரஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையை பெற்று தந்திருக்கிறது....இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் கேரளாவில் நடந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது உத்ராவின் மரணம்... 



Next Story

மேலும் செய்திகள்