உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விக்ரஹா கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!
இந்திய கடலோர காவல் படையின் நவீன ரோந்து கப்பலான விக்ரஹா சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த கப்பலின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...
இந்திய கடலோர காவல் படையின் நவீன ரோந்து கப்பலான விக்ரஹா சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த கப்பலின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...
வங்க கடலில் சீறிபாயும் இந்த கப்பல், முழுவதும் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட விக்ரஹா ரோந்து கப்பல்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ், இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான 7 ரோந்து கப்பல்கள் தயாரிக்கும் பணி சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளியில் உள்ள எல்.அண்ட்.டி. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
அதன்படி தயாரிக்கப்பட்ட விக்ரம், வீரா, விஜயா, வராக, வர்த், வஜ்ரா என 6 கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அவ்வரிசையில் உருவாக்கப்பட்ட 7-வது ரோந்து கப்பலான விக்ரஹாவை சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார்.
188 கோடி ரூபாய் மதிப்பிலான இக்கப்பல் முழுவதும் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டது.
விக்ரஹா கப்பலில் தொழில்நுட்ப ரேடார்கள், தொலைதொடர்பு மற்றும் பயணக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.
ஒரு போபொர்ஸ் பீரங்கியையும், இரண்டு ரிமோர்ட் கண்ட்ரோல் துப்பாக்கிகளையும் இக்கப்பல் தாங்கிச் செல்கிறது.
இரட்டை எஞ்ஜின் கொண்ட ஒரு ஹெலிகாப்டரையும், 4 அதிவேக படகுகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
எத்தகைய சூழ்நிலையிலும் இயங்கும் வகையில்நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல், கடலோர காவல்படையின் தாக்குதல் திறனை மேலும் வலிமையாக்கும்.
கடலில் ஆயில், எரிபொருள் சிந்தும் போது ஏற்படும் சுற்றுசூழல் மாசுப்பாடை எதிர்க்கொள்ளும் உபகரணங்களையும் கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தை மையமாக கொண்டு செயல்படவிருக்கும் இந்த கப்பல், கடலோர காவல் படையின் கிழக்குப்பிரிவு தளபதியின் கட்டுப்பாட்டில் பணியாற்றும்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ள கப்பலில், 11 அதிகாரிகள் மற்றும் 110 மாலுமிகள் இருப்பார்கள்.
இந்த கப்பல் அர்ப்பணிக்கப்பட்டதை தொடர்ந்து கடலோர காவல் படையிடம் இருக்கும் கப்பல்கள் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. இந்திய கடலோர காவல் படையிடம் 66 விமானங்கள் உள்ளன.
Next Story
