இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கிய உளவு சாப்ட்வேர் - 'பெகாசஸ்' ஸ்பைவேர் செயல்படுவது எப்படி?

உலக அளவில் செய்தியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர்களை அரசுகள் உளவு பார்த்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 'பெகாசஸ்' ஸ்பைவேர் சாப்ட்வேர் செல்போனுக்குள் நுழைவது எப்படி...? அது எவ்வாறு செயல்படுகிறது...?
x
'பெகாசஸ்' ஸ்பைவேர் உளவு சாப்ட்வேரை இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் கடந்த 2010 ஆண்டு உருவாக்கியது. இந்த சாப்ட்வேரை வாங்கியிருக்கும் முகமை, இலக்காக்கும் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப், ஐ-மெசேஜ், இ-மெயிலில் வாயிலாக அனுப்பும் லிங்கை பயனாளர், கிளிக் செய்யும் போது 'பெகாசஸ்' ஸ்பைவேர் சாப்ட்வேர் செல்போனில் இன்ஸ்டால் ஆகிவிடும். வாட்ஸ் அப் செயலியில் வரும் மிஸ்ட் கால் வாயிலாகவும் 'பெகாசஸ்' ஸ்பைவேர் சாப்ட்வேர் செல்போனை அடையலாம் எனவும் கூறப்படுகிறது.

செல்போனில் இயங்க தொடங்கியதும் பயனாளருக்கு தெரியாமல் செல்போன் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., இ-மெயில், வாட்ஸ் அப் பகிர்வு, வீடியோ கால், புகைப்படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள், கேமரா, ஜிபிஎஸ் டேட்டா, நாள்காட்டி, பதிவு செய்யப்பட்ட எண்கள் உள்பட அனைத்து தகவல்களையும்  உளவு பார்க்க விரும்புபவருக்கு அனுப்பிவிடும். இந்த மால்வர் சாப்ட்வேரை தடயவியல் கண்காணிப்பாலும், ஆண்டி வைரஸ் சாப்ட்வேராலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் இந்த சாப்ட்வேரை ரிமோர்ட் மூலம் இயக்குவோரே செயலிழக்கவும், நீக்கவும் முடியும் என்றும் கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'பெகாசஸ்' ஸ்பைவேர் சாப்ட்வேர் தாக்குதலில் தப்பிக்க தாக்குதலுக்கு உள்ளான செல்போனை பயன்படுத்துவதை தவிர்ப்பதுதான் ஒரே தீர்வு என்பதே சைபர் பிரிவு வல்லுநர்கள் பலரது கூற்றாக இருக்கிறது. இந்த சாப்ட்வேரை உளவு பார்க்க விரும்புவோர் 60 நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் போது, தாமாகவே செயல் இழந்துவிடும் என்றும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

குற்றவாளிகள், பயங்கரவாதிகளை உளவு பார்க்கும் வகையிலான சாப்ட்வேரை மனித உரிமையை பாதுகாப்பதில் நற்பெயரை கொண்டிருக்கும் நாடுகளின் ராணுவம், உளவுத்துறை மற்றும் சட்ட முகமைகளுக்கு மட்டும் வழங்குவதாக இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எந்த நாடுகளுக்கு வழங்கியிருக்கிறோம் என என்.எஸ்.ஓ. எந்த தகவலும் வெளியிடாத நிலையில், பக்ரைன், மெக்சிகோ, இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 45 நாடுகள் 'பெகாசஸ்' ஸ்பைவேர் சாப்ட்வேரை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்