இந்திய துறைமுகங்கள் மசோதாவை அரசியல் விவகாரமாக பார்க்க வேண்டாம் - மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா

இந்திய துறைமுகங்கள் மசோதாவை அரசியல் விவகாரமாக பார்க்க வேண்டாம் என, கடலோர மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைப்பின் சார்பில் 18 வது கடல் சார் மாநில மேம்பாட்டு குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, மாநிலங்களின் வளர்ச்சியை பொருத்து நாட்டின் வளர்ச்சி அமைந்திருப்பதாக கூறினார். கடல்சார் மாநில மேம்பாட்டு குழு கூட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய துறைமுகங்கள் மசோதாவை அரசியல் பார்வையுடன் பார்க்க வேண்டாம் எனவும் வளர்ச்சி விவகாரமாக பாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். 

கடலோரங்களில் மிகச் சிறப்பான மேலாண்மை மற்றும் பயன்பாட்டுக்கு இந்திய துறைமுகங்கள் மசோதா உதவி புரியும் எனவும் ஒருங்கிணைந்த துறைமுகங்கள் மசோதாவை உருவாக்க மாநிலங்களின் கருத்துக்களை வரவேற்க தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார். மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவா, தெலுங்கானா ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட கடலோர மாநிலங்களை சார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா வேலு கலந்து கொண்டார்.  மத்திய அரசு கொண்டு வர இருக்கும் சிறு துறைமுகங்கள் மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சரின் இந்த கருத்து, முக்கியத்துவம் பெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்