ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம்

நாட்டில் ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
நாட்டில் ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிக்க செய்ய நடவடிக்கை  எடுக்கப்படும் என பிரதமர் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாட்டில் ஆக்ஸிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்களின் விநியோகத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் அது தொடர்பான மருத்துவ உபகரணங்களின் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதாக இந்த கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்ஸிஜன் மற்றும் அது தொடர்பான மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய மத்திய அமைச்சகங்கள் மற்றும் இதர துறைகள் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதிகரித்துவரும் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் அவற்றின் சாதனங்களின் தேவையை எதிர்கொள்ள ஏதுவாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ சாதனங்கள் மீதான இறக்குமதி வரி மற்றும் சுகாதார வரி முழுமையாக உடனடியாக தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆக்சிஜன்,ஆக்சிஜனை ஏற்றுமதி செய்யும் ISO Container, ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இதர சாதனங்கள், ஆக்சிஜன் ஜெனரேட்டர், உள்ளிட்ட 16 சாதனங்கள் மீதான இறக்குமதி வரி மற்றும் சுகாதார வரியில் இருந்து 3 மாதங்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.

இவை தவிர வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியை மூன்று மாதங்களுக்கு உடனடியாக தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் இறக்குமதி தொடர்பான விவகாரங்களுக்கு உடனுக்குடன் அனுமதி அளிக்க ஏதுவாக இணைச் செயலாளர் கெளரவ் மசல்தான் என்ற சுங்கத்துறை அதிகாரியையும் நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்