கொரோனாவின் கோரமுகம் - கொத்துக் கொத்தாக உயிரிழக்கும் மக்கள்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தகன மையங்களும் நிரம்பி வழியும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் கோரமுகம் - கொத்துக் கொத்தாக உயிரிழக்கும் மக்கள்
x
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தகன மையங்களும் நிரம்பி வழியும் அவலம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்த இந்தியாவை சர்வதேச அமைப்புகளும், பிற நாடுகளும் பாராட்டின. ஆனால் இந்தியாவில் 2-வது கொரோனா அலை காரணமாக தொற்று பாதிப்பு விசுவரூபம் எடுத்து வருகிறது. இதுவரையில் இல்லாத வகையில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியிருக்கிறது. கடந்த அக்டோபருக்கு பிறகு கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலியும் ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. மகாராஷ்டிரா, புதுடெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், சத்தீஷ்கர், பஞ்சாப்,  கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பும், உயிரிழப்பும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் மும்பை, புனேவில் கொரோனாவுக்கு கொத்துக் கொகுத்தாக உயிரிழந்து வருகின்றனர். மாநிலத்தில் பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் அவலமும் நேரிட்டுள்ளது. மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தகன மேடைகளும் சடலங்களால் நிரம்பி வருகிறது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், சூரத் நகரங்களில் கொரோனா தன்னுடைய கோர முகத்தை காட்டி வருகிறது. அகமதாபாத் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அங்கு மருத்துவமனைகள்  கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது. மறுபுறம் தகன மேடைகளிலும் சடலங்கள் குவிந்து வருகிறது. அங்கு இறுதி சடங்குக்காக இறந்தவர்களின் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. தகன மேடையின் வெப்பத்தினால் புகைப்போக்கிகளும் உருகும் நிலை ஏற்பட்டுள்ளது.  அங்கு நாளொன்றுக்கு 4 சடலங்கள் எரிக்கப்படும் தகன மேடைகளில் 20 சடலங்கள் எரிக்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. அரசு தரப்பில் எரிவாயு அடிப்படையிலான 6 தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உறவினர்கள் சடலங்களை வெட்ட வெளியில் எரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட சத்தீஷ்கரிலும் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.  மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. அங்கும் இறுதி சடங்கு மையங்களில் சடலங்களுடன் உறவினர்கள், காத்திருக்கும் அவலம் நேரிட்டுள்ளது. இதனை சமாளிக்க மாநில அரசு 6 மின்சார தகன மேடைகளை அமைத்து வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு மத்தியில், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்