நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு... இந்திய திரைத்துறையின் உயரிய விருது

இந்திய திரைப்பட துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு... இந்திய திரைத்துறையின் உயரிய விருது
x

இந்திய திரைப்பட துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய திரைத்துறையில், வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டு தோறும், தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையினருக்கு கிடைக்கும் கவுரவமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இந்த விருது கருதப்படுகிறது. தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் போது, நடிகர் ர​ஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படும். விருதுடன் சான்றிதழ் மற்றும் 10 லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும். ஏற்கனவே ரஜினிக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் விருதை பெறுகிறார். தாதாசாகேப் விருது கடந்த 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைப்படத் துறையின் தந்தை என கூறப்படும் தாதாசாகேப் பால்கேவின் பெயரில், திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்தாண்டு இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"தேர்தலுக்கும், விருதுக்கும் தொடர்பு இல்லை" - மத்திய அமைச்சர் விளக்கம்

இதனிடையே, ரஜினிக்கு தாதாசாகேப் விருது வழங்கப்பட்டதற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய திரைத்துறைக்கு ரஜினி ஆற்றிய பங்களிப்பிற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.

"தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது" - பிரதமர் மோடி வாழ்த்து 

தலைவனுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பல தலைமுறைகளிடையே பிரபலமானவர், அவருடைய வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஒருசிலர் மட்டுமே ஈடாக இருக்கிறார்கள், அன்பான ஒரு ஆளுமை, அவர்தான் ரஜினி காந்த் எனக் கூறியுள்ளார். மேலும், தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதீத மகிழ்ச்சியை தரும் செய்தி எனக் கூறியிருக்கும் பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

ரஜினிக்கு முதலமைச்சர் வாழ்த்து

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், திரைத்துறையில் தங்களது நடிப்புத் திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது என்று பதிவிட்டுள்ளார். மேலும், தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துவதாகவும், எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிக்கு ஸ்டாலின் வாழ்த்து

தாதாசாகேப் விருது பெறவுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், இனிய நண்பரும், தமிழ்த் திரையுலகில் தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்திற்கு, 'தாதா சாகேப் பால்கே விருது' கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், எப்போதோ இந்த விருது தரப்பட்டிருக்க வேண்டும் என்றும் தாமதமாகத் தரப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் இலக்கணமான ரஜினியின் கலைப்பயணம் என்றென்றும் தொடர வாழ்த்துவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்


ரஜினிக்கு தினகரன் வாழ்த்து

தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிக்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய திரையுலகிற்கு மிகச்சிறந்த பங்களிப்பை ரஜினிகாந்த் வழங்கி வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தாதா சாகேப் பால்கே விருது மட்டுமின்றி மென்மேலும் பல சிகரங்களைத் தொட நண்பர் ரஜினிகாந்தை வாழ்த்துவதாகவும் தினகரன் கூறியுள்ளார்.

ரஜினிக்கு விஜய் வசந்த் வாழ்த்து... 

நடிகர் ரஜினிகாந்திற்கு, கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், தமிழகமே பெருமை கொள்ளும் தருணம் இது என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த், பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்