தேஜஸ் சூப்பர்சானிக் விமானம் ஒரு பார்வை - மெய்சிலிர்க்க வைத்த சாகசம்

இந்தியாவின் போர் விமான ஏற்றுமதி திட்டத்தில் கவனம் பெற்றிருக்கும் தேஜஸ் விமானம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
தேஜஸ் சூப்பர்சானிக் விமானம் ஒரு பார்வை - மெய்சிலிர்க்க வைத்த சாகசம்
x
13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியில், வான் மேகங்களை கிழித்து கொண்டு தன்னுடைய பராக்கிரமத்தை பறைசாற்றியது தேஜஸ்... உள்நாட்டு தயாரிப்பான இந்த தேஜஸ் சூப்பர்சானிக் விமானம் வேகமாகவும், திடீரென பக்காவாட்டிலும், மேலும் கீழுமாகவும் சுழன்று புரிந்த சாகசம் அனைவரையும் மெர்சிலிர்க்க வைத்தது. இந்த ஆயுதம் தாங்கிய விமானம் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்  ஆகியவற்றின் கூட்டு முயற்சியால்  உருவாக்கப்பட்டது. சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட மிக் 21 ரக விமானங்களை மாற்ற வேண்டும் மற்றும் உள்நாட்டிலே விமானங்களை தயாரிக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் 1983 ஆம் ஆண்டு 560 கோடி ரூபாய் செலவில் போர் விமானத்தை உருவாக்கும் திட்டம் தொடங்கியது.

பின்னர் பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்ட திட்டம், அமெரிக்காவின் தடை உள்ளிட்ட காரணிகளால் பயன்பாட்டுக்கு பயன்பாட்டுக்கு வருவதில் கால தாமத்தை எதிர்க்கொண்டது. இறுதியில் 2001-ல் வாஜ்பாய் அரசின் போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பின்னர் இந்திய விமானப்படை 40 தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தது. இருப்பினும் நவீனப்படுத்துதல் மற்றும் குறைகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளால் உற்பத்தியில் தாமதமாகி 2016-ல்தான் விமானப் படையில் சேர்க்கப்பட்டது. 4-ம் தலைமுறை ஒற்றை இருக்கைக் கொண்ட அதிநவீன தேஜஸ் விமானம் 13 டன் எடை கொண்டது. 3 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்து செல்லும் திறன் கொண்டது. மணிக்கு 1,350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 

இந்த விமானத்தில் எந்திர துப்பாக்கிகளும் -  8 ஏவுகணை தாங்கிகளும் உள்ளன. வானில் இருந்து வான் இலக்குகளையும், தரையிலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. பிரம்மோஸ், அஸ்த்ரா, லேசர் வெடிகுண்டுகள், கொத்து வெடிகுண்டுகள் போன்ற குண்டுகளையும் வீசும் சக்தியை கொண்டது. வானில் எதிரி நாட்டு விமானங்கள், ஏவுகணைகளை கண்டறிந்து தாக்கும் திறன் கொண்ட  முன்னேறிய மின்னணு முறையில் ஸ்கேன் செய்யும் ரேடார் வசதியை கொண்டிருக்கிறது. இஸ்ரேல் உதவியுடன் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. தேஜஸ் என்ற பெயருக்கு வேகம், பொலிவு, ஒளி என்றெல்லாம் பொருள்படும். அதற்கு ஏற்றவகையில் ஒளியின் வேகத்தைவிட வேகமாக சீறிப்பாய்கிறது தேஜஸ்.

இந்த தேஜஸ் எம்.கே-1 ஏ விமானங்கள் 83-ஐ விமானப்படைக்கு  48 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு வாங்குகிறது. இதில் 10 விமானங்கள் இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் ஆகும். உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையிலான நகர்வில், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆர்டர் இதுவாகும். இந்த தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் மேற்காசிய நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன என இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர் மாதவன் கூறியிருக்கிறார்.

போர் விமானம் ஒன்றின் விலை 306 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கூறியிருக்கும் அவர், இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு இதே விலையில் கொடுக்கவும் தயாராக உள்ளதாகவும் கூறியிருக்கிறார். இந்தியாவின் போர் விமான ஏற்றுமதி கனவு திட்டத்தில் கவனம் பெற்றிருக்கும் தேஜஸ் விமானம் உலக நாடுகளின் வானிலும் வட்டமிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்