எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா - இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து

அருணாச்சல் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது சீனா.
எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா - இந்திய வெளியுறவு அமைச்சகம் கருத்து
x
அருணாச்சல் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது சீனா. எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில், சீனா புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் நடவடிக்கை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
1962ஆம் ஆண்டு இந்தியா சீனா இடையே போர் நடைபெற்றது முதல் இந்த நிமிடம் வரை இருநாட்டு எல்லை பிரச்னை தீராத பிரச்னையாகவே உள்ளது.போரின்முடிவில் அருணாச்சல பிரதேசத்தின் மன்கோஹன் கோடு வரை நுழைந்த சீனப் படை, இதுவரை அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளது.இருப்பினும் அருணாச்சலத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் சீனா, 2017 ம் ஆண்டு ஜூன்மாதம் டோக்லாமில் ராணுவ வீரர்களை அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைய வைத்தது தொடர்ந்து அருணாச்சலத்தை தங்கள் பகுதி என வரைபடத்தை வெளியிட்டது சர்ச்சையை உண்டாக்கியது.கடந்த வருடம் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி இந்திய வீரர்களை குறிவைத்து தாக்கியது என நீண்டு கொண்டே போகிறது சீனாவின் அத்துமீறல்.இப்படி தொடர்ந்து இந்தியாவிற்கு தலைவலியை கொடுத்து வரும் சீனா, தற்போது,  அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு சுபன்சிரி மாவட்டத்தில் ஓடும் சாரி சூ நதிக் கரையோரம் சுமார் 101 வீடுகளை கட்டி புதிய கிராமத்தையே உருவாக்கியுள்ளது. இந்திய எல்லைப் பகுதியில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிராமத்தை, அமெரிக்கவை சேர்ந்த பிளானட் லேப் என்ற நிறுவனம் உறுதி செய்துள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், சீனா  புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளது கவனத்திற்கு வந்திருப்பதாகவும், பல ஆண்டுகளாக இதுபோன்று செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இந்திய எல்லைப் பகுதிகளில் இந்திய அரசும் குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கட்டமைப்புகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள வெளியுறவு அமைச்சகம், நாட்டின் நிலப்பகுதிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.மறுபக்கம் அருணாச்சல் பாஜக எம்.பி.யான தபீர் காவோவும், 1980 ஆம் ஆண்டில் இருந்தே சீனா இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து வருவதாகவும், இதுபோன்று புதிய கிராமங்களை சீனா உருவாக்குவது புதிதல்ல என தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக் குட்பட்ட பிசா மற்றும் மாஸா இடையே சீனா ராணுவ தளம் போன்றவையும் ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.இதனை மேற்கோள் காட்டியுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய - சீன எல்லையில் பிரச்சனைக்குரிய பகுதிகளை நிரந்தர குடியிருப்பாக மாற்ற சீனா முனைந்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். திடுக்கிட வைக்கும் இந்த தகவல் குறித்து அரசு என்ன சொல்லப்போகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஏற்கனவே இருநாட்டு எல்லை பிரச்னை உச்சத்தில் இருக்க, தற்போது சீனாவின் செயல்பாட்டிற்கு இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 

Next Story

மேலும் செய்திகள்