கன்னியாஸ்திரி கோடாரியால் அடித்து கொடூர கொலை - 28 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தீர்ப்பு

கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
கன்னியாஸ்திரி கோடாரியால் அடித்து கொடூர கொலை - 28 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தீர்ப்பு
x
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா. அங்குள்ள செயின்ட் பயஸ் கான்வென்ட்டில் தங்கியிருந்த அபயா, 1992-ஆம் ஆண்டு, மார்ச் 27-ம் தேதி கான்வென்ட்டில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19. 

இது தற்கொலை என கான்வென்ட் தரப்பு கூறிய போதிலும், இது கொலை தான் என்றும் உரிய விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தழுவி 1999ல் சுரேஷ் கோபி நடிப்பில் க்ரைம் பைல் என்ற படமும் வெளியானது. 

தொடர் நெருக்கடிகளால் இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. அவர்கள் களமிறங்கி விசாரித்த போது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கான்வென்ட்டில் பாதிரியாராக இருந்த தாமஸ் கோட்டூருக்கும், அங்கிருந்த கன்னியாஸ்திரி செபிக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. அவர்கள் உல்லாசமாக இருப்பதை பார்த்த அபயாவை கோடாரியால் அடித்துக்  கொன்று கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. 

த்ரில்லர் சினிமா பாணியில் பல திடுக்கிடும் திருப்பங்களை நோக்கி சென்ற இந்த வழக்கில் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கைதாகினர். அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு விசாரணையும் கிட்டத்தட்ட 28 வருடங்களாக நடந்து வந்தது. 

இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாக இருந்த ராஜூ என்பவருக்கு கோடிகணக்கில் பணம் தருவதாக பாதிரியார் ஆசை காட்டி வந்ததாகவும் புகார்கள் எழுந்தன. 

அபயா கொலை வழக்கில் முதலில் விசாரித்த கோட்டயம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகஸ்டின் என்பவரும் இந்த வழக்கின் பிரதியாக சேர்க்கப்பட்டார். ஆனால் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்னரே அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபோல் கொலை வழக்கில் தொடர்புடைய பல சாட்சிகளை கலைப்பதற்காகவும் முயற்சிகள் நடந்தன. கான்வென்ட்டில் இருந்த பலரும் அபயாவின் மரணம் தற்கொலை தான் என பிறழ் சாட்சியம் அளித்தனர். ஆனால் மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டி அபயாவின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறினர்.

வழக்கில் தீவிரம் காட்டிய சிபிஐயும் இதை விடுவதாக இல்லை.. பிரைன் மேப்பிங், பிரெயின் பிங்கர் பிரிண்ட் டெஸ்ட், பாலி கிராப் டெஸ்ட், நார்கோ டெஸ்ட் என அத்தனை டெக்னாலஜிகளையும் கையில் எடுத்த சிபிஐ, குற்றவாளிகளை கண்டறிந்தது. 

இந்த நிலையில் கொலை செய்த பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளித்தது திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.... இதையடுத்து குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் தண்டனையையும் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாதிரியார் தாமஸ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஆறரை லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொலை செய்த கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கன்னியாஸ்திரியின் மரணம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டி நின்ற அவரின் பெற்றோர் இதை பார்க்க உயிரோடு இல்லை என்பது சோகமே. 


Next Story

மேலும் செய்திகள்