நாட்டை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை - 2000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ

நாட்டையே அதிர வைத்த ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
நாட்டை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை - 2000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ
x
செப்டம்பர் 30, இரவு 2.30 மணி... உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகர் அருகே சிறிய கிராமம். 19 வயது அப்பாவி இளம்பெண் ஒருவரின் சடலம், காவல் துறையினரால் அனாதை பிணம் போல எரியூட்டப்பட, வீட்டுக்காவலில் இருந்த  அவரின் குடும்பத்தினர்  செய்வதறியாமல் கதற, அந்த காட்சிகள், நாட்டின் மனசாட்சியை உலுக்கின. 

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, பட்டியலினத்தை சேர்ந்த அந்த இளம்பெண், உயர்சாதி வகுப்பை சேர்ந்த நால்வரால் சாதிய வன்மத்துடன் கற்பழிக்கப்பட்டு, அந்த போராட்டத்தில் அந்த பெண்ணின் கழுத்து துப்பட்டாவால் நெரிக்கப்பட, அதனால் தண்டுவடத்தில் அடிபட்டு படுத்த படுக்கையாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக டெல்லி அழைத்து சென்றும், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். 

இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான நால்வரும் கைது செய்யப்பட்டாலும், பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட காட்டாமல் அவசரகதியில் உ.பி., போலீசார் எரிக்க, விவகாரம் பெரும் விவாதப்பொருளானது.தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியர் பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களின் வாக்குமூலத்தை மாற்றச்சொல்ல, அந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், உத்தரபிரதேச காவல்துறை அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என்றும், இது அம்மாநிலத்தில் கலவரம் நிகழ்த்த செய்யப்பட்ட சதி என்றும் கூறி கேட்போரை கதிகலங்க வைத்தது. நடப்பவற்றை கண்டு சமூகவலைத்தளங்கள் தகிக்க, எதிர்க்கட்சிகளும் போராட்டத்தை முன்னெடுக்க, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் ராஷ்ட்ரிய சவர்ண சங்கத் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.

ஒருபுறம், இந்த விவகாரம் மாநிலத்தின் பெயரை கெடுக்க நடக்கும் சர்வதேச சதி என சந்தேகம் கிளப்ப, மற்றொருபுறம், கற்பழிப்பு குற்றச்சாட்டு பொய் என்றும், இது ஆணவ கொலை என்றும், உயிரிழந்த பெண்ணின் நடத்தை குறித்தும் தொடர்ச்சியாக விமர்சித்தனர், குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஊர்மக்கள்.

தொடர் அழுத்தங்கள் காரணமாக, இவ்வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் எதிராக, 376, 376-A, 376-D, 302 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டங்களின்கீழ் வழக்குப் பதிந்து,  2000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. 

அதில், அந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டதும், கொடூரமாக தாக்கப்பட்டதால் உயிரிழந்ததையும் உறுதி செய்திருக்கிறது சிபிஐ. அப்பாவி பெண்ணின் மீது சுமத்தப்பட்ட அபாண்ட குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த குற்றப்பத்திரிக்கை என்ற ஆறுதல் ஒருபுறம் இருந்தாலும், மகளின் மரணத்திற்கு  நியாயம் வேண்டி காத்திருக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைப்பது எப்போது? என்ற கேள்வியே இங்கு பிரதானம்.

Next Story

மேலும் செய்திகள்