நிலத் தகராறில் கோயில் பூசாரியை உயிரோடு எரித்துக் கொன்ற கும்பல்

ராஜஸ்தானில் நிலத் தகராறில் கோயில் பூசாரி உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது...
நிலத் தகராறில் கோயில் பூசாரியை உயிரோடு எரித்துக் கொன்ற கும்பல்
x
ஜெய்ப்பூர் அருகே உள்ள கரோலி என்ற பகுதியை சேர்ந்தவர் பாபுலால் வைஷவ். இவர் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான ஐந்தரை ஏக்கர் நிலத்தை நிர்வகித்து வந்தார். 

பொதுவாக இங்குள்ள கோயில்களில் பூசாரிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிலத்தை கொடுத்து அதை அவர்களே நிர்வாகம் செய்ய வைப்பார்கள். இந்த நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்து அதில் இருந்து வருமானத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் இந்த நடைமுறை அங்கு உள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி அங்குள்ள கோயிலுக்கு சொந்தமான நிலம் பாபுலால் வசம் ஒப்படைக்கப்பட்டு அவரும் அதில் தினை சாகுபடி செய்து வந்துள்ளார். 
ஆனால் இந்த நிலத்தை தங்களுடையது என கூறி அதனை அபகரிக்க வேறொரு கும்பல் திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மோதல் இருந்த நிலையில், பூசாரியோ அதை கண்டுகொள்ளாமல் விவசாயம் செய்து வந்துள்ளார். 
இந்த விவகாரம் பஞ்சாயத்துக்கு சென்ற போது பூசாரிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது. 
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், சம்பவ இடத்திற்கு வந்து பாபுலாலின் நிலத்திலும் அவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளது.  இதில் படுகாயமடைந்த பாபுலால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது தன்னை 6 பேர் கொண்ட  கும்பல் எரித்ததாக வாக்குமூலம் அளித்தார். புதன்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் பாபுலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ராஜஸ்தானில் கோயில் பூசாரி ஒருவர் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்